தைப்பே, ஜூன் 28 – தைவானில் உள்ள ஒரு நீர் விளையாட்டுப் பூங்காவில் இன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து அந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடையிலிருந்து இரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட ஒரு வகையான வண்ணப் பொடி தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டது.
தைவான் நாட்டின் தலைநகர் தைப்பே-க்கு அருகாமையில் உள்ள ஃபார்மோசா நீர் பூங்காவில் (Formosa Water Park) சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஓர் இசை மேடை நிகழ்ச்சியைக் காண சுமார் ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.
அப்போது வீசப்பட்ட வண்ணப்பொடி தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் உடல் கீழ்ப் பாகங்கள் பாதிப்படைந்தன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலைவரை 516 பேர் வரை தீக்காயங்களோடு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவர்களில் 194 பேர் கடுமையான தீக்காயங்களைப் பெற்றிருப்பதாகவும் இருப்பினும் இதுவரை யாரும் மரணமடையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு உயிர் ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கு உடல்காயம் ஏற்பட்டிருக்கும் வேளையில், வீசப்பட்ட வண்ணப்பொடியைச் சுவாசித்த பலருக்கு உடலின் உள் பாகங்களிலும் தீப்புண்கள் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் உண்டாகியிருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணங்களை ஆராயுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.