கோலாலம்பூர், ஜூன் 29 – தைவானில் நீர் விளையாட்டுப் பூங்கா ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த 500க்கும் மேற்பட்டோரில் மூன்றாம் ஆண்டு மருத்துவ இளங்கலை படிப்புப் படித்து வரும் மலேசிய மாணவியும் ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.
கைகள் மற்றும் கால்களில் இரண்டாம் நிலைத் தீக்காயம் அடைந்துள்ள லின் ஷி லி (வயது 23) என்ற அம்மாணவி, ஜோகூர் மாநிலம் யோங் பெங்கைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து லின் ஷி-யின் தாய் சூ மீ மீ கூறுகையில், தனது மகளின் உடம்பில் 54 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும் லின் சுயநினைவுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிப்பை மேற்கொண்டு வரும் லின், தற்போது தைபே சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனிடையே, தைபேயில் உள்ள மலேசிய நட்புறவு மற்றும் வர்த்தக மையத்தில் இருந்து அதிகாரிகள் லின்னைப் பார்வையிட்டு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருவதாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று அந்தக் குறிப்பிட்ட நீர் விளையாட்டு மையத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடையிலிருந்து இரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வீசப்பட்ட ஒரு வகையான வண்ணப் பொடி தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.