புது டெல்லி, ஜூன் 29 – சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் ஆறே மாதங்களில் ஒரு மில்லியன் திறன்பேசிகளை விற்பனை செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சாம்சுங் நிறுவனம் இந்தியாவில் தனது ‘டைசன்’ (Tizen) இயங்குதளத்தில் இயங்கும் Z1 திறன்பேசிகளை அறிமுகம் செய்தது. ரூபாய் 5700-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த திறன்பேசிகள் இந்திய நடுத்தர வர்க்கம் குறிப்பாக அடித்தட்டு மக்களை இலக்காகக் கொண்டு களமிறக்கப்பட்டது.
4 அங்குல அளவு கொண்ட இந்தத் திறன்பேசிகள், எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறந்த பயனர் இடைமுகம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டது. செயலிகளைப் பொறுத்தவரையில், பேஸ்புக், டுவிட்டர், யூ-டியுப் போன்றவை திறன்பேசிகளில் ஏற்கனவே மேம்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல், ‘கூகுள் ப்ளே ஸ்டோர்’ (Google Play Store)-ல் டைசென் இயங்குதளத்தில் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகள் இருந்தன. இதன் காரணமாக இந்தத் திறன்பேசிகளின் விற்பனை இந்தியாவில் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் முதல் திறன்பேசிக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாகச் சாம்சுங் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பினை வெளியிட முடிவு செய்தது. இது தொடர்பாக சாம்சுங் நிறுவனத்தின் இந்திய சந்தைகளுக்கான துணைத் தலைவர் அசிம் வர்சி கூறுகையில், “நாங்கள் எதிர்பார்த்ததை விட டைசன் திறன்பேசிகளுக்கு இந்தியாவில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் எங்களது அடுத்த தயாரிப்பினை வெளியிட உள்ளோம்.”
“‘கோல்டன் வேரியன்ட்’ (Golden Variant) என்ற அந்தத் திறன்பேசிகள் எங்களின் முந்தைய தயாரிப்பினை விட கூடுதல் வசதிகள் கொண்டவையாக இருக்கும். விரைவில் இந்தியச் சந்தைகளுக்கு வர இருக்கும் இந்தத் திறன்பேசிகளின் விலை 8000-15000 ரூபாய்க்குள் இருக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
தற்சமயம் இந்தியாவை மட்டும் குறி வைத்து டைசன் திறன்பேசிகளைக் களமிறக்கி உள்ள சாம்சுங் அங்கு அண்டிரொய்டின் வர்த்தகத்தைக் குறைத்து விட்டால், உலக சந்தைகளை எளிதாகப் பிடித்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளது.