Home தொழில் நுட்பம் ஆபிஸ் செயலியை அண்டிரொய்டு திறன்பேசிகளிலும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்! 

ஆபிஸ் செயலியை அண்டிரொய்டு திறன்பேசிகளிலும் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்! 

622
0
SHARE
Ad

officeகோலாலம்பூர், ஜூன் 29 – ஆபிஸ் செயலிகளை அண்டிரொய்டு திறன்பேசிகளில் மேம்படுத்தும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், அண்டிரொய்டு தட்டைக் கணினிகளை வைத்திருக்கும் பயனர்கள் எம்எஸ் ஆபிஸின் புகழ்பெற்ற பயன்பாடுகளான ‘வேர்ட்’ (Word), ‘எக்ஸல்’ (Excel) மற்றும் ‘பவர் பாயிண்ட்’ (PowerPoint) பயன்பாடுகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. தட்டைக் கணினிகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும், பெரும்பான்மையாக திறன்பேசிகளை வைத்திருக்கும் பயனர்கள் இந்த அறிவிப்பினால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், அவர்களையும் திருப்திபடுத்தும் நோக்கத்தோடு, மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சத்யா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் தலைமை நிர்வாகியாக பதவி ஏற்ற நாள் முதல், மென்பொருள் தளத்தினை விட செல்பேசி தளத்திற்கும், ‘கிளவுட்’ (cloud) தளத்திற்கும் அதிக அக்கறை காட்டி வருகிறார். அதன் எதிரொலி தான் இந்த புதிய அறிவிப்புகளுக்கான காரணம். குறிப்பாக எம் எஸ் ஆபிஸ், செயலி வடிவம் பெற்றதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஆவணங்கள், அட்டவணைகள், கணக்குப்பதிவுகள், அலுவலகk குறிப்புகள் போன்றவை டிஜிட்டல் முறைக்கு மாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவற்றை தொகுப்பதும், மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினமான பணியாக இருந்தது. அப்பொழுது, மைக்ரோசோஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘எம் எஸ் ஆபிஸ்’ (MS Office) மென்பொருள், ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

எம்எஸ் ஆபிஸிற்குப் போட்டியாகப் பல்வேறு நிறுவனங்கள் பல மென்பொருட்களை அறிமுகப்படுத்தினாலும், மைக்ரோசோஃப்ட்டிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தற்போது தொழில்நுட்ப உலகம் செல்பேசிகளின் தளத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதால், மாற்றங்களை ஏற்றுக் கொண்ட மைக்ரோசாப்ட், எம் எஸ் ஆபிஸ் மென்பொருளை, திறன்பேசிகளுக்கு ஒத்துழைக்கும் செயலியாக மாற்றியது.

ஏற்கனவே, ஆப்பிளின் ஐஒஎஸ் தளத்தில் ஆபிஸ் செயலியை வெளியிட்ட மைக்ரோசாப்ட், தற்போது அண்டிரொய்டு தளத்தின் அனைத்துக் கருவிகளிலும் ஆபிஸ் செயலியை வெளியிட முடிவு செய்துள்ளது செல்பேசி தளத்தில் அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட நகர்தலாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அந்நிறுவனம், ‘டெல்’ (Dell), ‘எல்ஜி’ (LG) போன்ற நிறுவனங்களுடனும் ஆபிஸ் செயலி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.