Home இந்தியா நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில் மாணவருக்குப் பதிலாக நாய்ப்படம்!  

நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில் மாணவருக்குப் பதிலாக நாய்ப்படம்!  

531
0
SHARE
Ad

dogகொல்கத்தா, ஜூன் 29- நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில் மாணவர் படத்துக்குப் பதிலாக நாய்ப் படம் இடம்பெற்ற குளறுபடியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு படத்தில் நடிகர் விவேக், கார்த்திக்கிடம்: “அதை ஏன்டா கேக்குற? ரேஷன் கார்டுக்குப் பதிலா என் பாஸ்போர்ட்ல மண்ணெண்ணெய் 3 லிட்டரு,  அரிசி  20 கிலோன்னு பிரிண்ட் பண்ணிட்டாய்ங்க. அந்தப் பிரச்சனையே இப்பத்தான் மெல்ல மெல்ல சால்வ் ஆயிட்டு வருது” என்று நகைச்சுவையாகச்  சொல்வார்.

அவர் இல்லாததை ஒன்றும் அப்படிச் சொல்லவில்லை. அரசு அலுவலகங்களில் கவனக் குறைவால் இப்படிப்பட்ட குளறுபடிகள் அடிக்கடி நடப்பதுண்டு.

#TamilSchoolmychoice

விவேக் குறிப்பிட்டது போல் ஒரு குளறுபடி நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் ஆணின் படத்தைப் போட்டுப் பெண்ணின் பெயர் இடம்பெறும். சில நேரங்களில் படமே மாறி விடும்.

ஆனால் இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், மாணவரின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தைப் போட்டு நுழைவுச்சீட்டு வழங்கிய சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்துள்ளது.

அங்குள்ள மிட்னாபூரைச் சேர்ந்தவர் சோமியாதிப் மகாதோ (வயது 18). பிளஸ்–2 படித்துள்ள இவர், ஐ.டி.ஐ. படிக்க விரும்பினார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் ஐ.டி.ஐ. படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுதுவதற்காகச் சோமியாதிப் மகாதோ விண்ணப்பித்து இருந்தார்.

தேர்வுக்கான அடையாள அட்டையை இணையதளம் மூலமாக அவர் பதிவிறக்கம் செய்து பார்த்தபோது அவருக்கு ஒர் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது படம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு நாயின் படம் இருந்தது.

இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்தார். இதனையடுத்து உடனடியாக நாயின் படம் அகற்றப்பட்டு, மாணவரின் படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குளறுபடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.