Home இந்தியா நஜிப் இந்தியர் வாக்குகளை இழந்துவிடுவார் எனக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர்: இராமசாமி!

நஜிப் இந்தியர் வாக்குகளை இழந்துவிடுவார் எனக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர்: இராமசாமி!

699
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 30 – ஜசெக தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி மலேசியாகினி ஆங்கில இணையச் செய்தித் தளத்தில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்களும், அதனை அடிப்படையாக வைத்து, நேற்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருக்கும் செய்திகளும், உண்மையிலேயே பலருக்கு ஆச்சரியத்தையும், இராமசாமியின் அரசியல் ஞானத்தின் மீதான சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

ramasamyகாரணம், தேசிய முன்னணியை வீழ்த்த வேண்டும், மாற்று அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி ஜனநாயக செயல் கட்சி.

இன்றைக்கு மலேசிய அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பி, நஜிப்பின் பிரதமர் பதவிக்கே உலை வைத்திருக்கும் 1எம்டிபி ஊழல் விவகாரங்களை முதன் முதலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவரே ஜசெகவின் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டோனி புவாதான்!

#TamilSchoolmychoice

இன்னொரு புறத்தில் லிம் கிட் சியாங், லிம் குவான் எங் ஆகியோரின் தேசிய முன்னணிக்கு எதிரான போராட்டங்களைப் பற்றி விவரிக்கவே தேவையில்லை.

ஆனால், இராமசாமியோ பழனிவேல்  மஇகாவின் தேசியத் தலைவராக தொடராவிட்டால், நஜிப்பிற்கு இந்தியர்களிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் காணாமல் போய்விடும் எனக் கரிசனத்தோடு கவலைப்பட்டிருக்கின்றார்.

நஜிப்பின் செல்வாக்கு இந்தியர்களிடையே குறைந்தால், அதனால் தேசிய முன்னணி பலவீனப்படும் – எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் கூடும் -என ஒரு ஜசெக தலைவர் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்?

ஆனால், அதற்காகக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர் இராமசாமிதான்!

இந்த அறிக்கையின் மூலம் பழனிவேலுவை ஆதரிக்கும் ஒரு மஇகா உறுப்பினராகத்தான் அவர் தன்னைக் காட்டிக் கொண்டுள்ளார்.

மற்ற கட்சி விவகாரங்களில் தலையிடுவது ஏன்?

Datuk_Dr.S.Subramaniamபொதுவாக, மலேசிய அரசியலைப் பொறுத்தவரை மற்ற கட்சிகளின் உட்கட்சிப் போராட்டங்களிலும், விவகாரங்களிலும் நேரடியாகத் தலையிட்டு, கருத்து தெரிவிப்பதைப் பெரும்பாலான தலைவர்கள் தவிர்த்து விடுவார்கள்.

மேலோட்டமாகச் சில கருத்துகள் சொல்வார்களே தவிர, நேரடியாக எந்தத் தலைவரையும், அணியையும் தாக்கி யாரும் கருத்துச் சொல்ல மாட்டார்கள்.

ஆனால், மற்ற கட்சிகளின் உட்கட்சிப் போராட்டங்களில் தலையிடக் கூடாது என்ற அரசியல் நாகரிகத்தையும், வரம்பையும் மீறி, இராமசாமி நேரடியாக மஇகா தலைவர்களைத் தாக்கி அறிக்கை விட்டிருக்கின்றார்.

ஜசெகவின் உட்கட்சிப் போராட்டத்தில், மஇகா தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தால், இந்நேரம் இதே இராமசாமி தாண்டிக் குதித்திருப்பார். எங்கள் கட்சியில் தலையிடாதீர்கள், உங்கள் வேலையைப் பாருங்கள் என்று பொங்கி எழுந்திருப்பார்.

டாக்டர் சுப்ரா மோசமான தேர்வா?

மஇகாவின் இடைக்காலத் தலைவராக இருக்கும் டாக்டர் சுப்ரா சாமிவேலுவின் தலையாட்டிப் பொம்மை என்றும், இவர் கட்சிக்கு மோசமான தேர்வு என்றும் இராமசாமி கூறியிருக்கின்றார்.

3007 mic agmமஇகாவுக்குள் ஒருவர் மற்றவரின் பேச்சைக் கேட்டாலும் – மஇகாவுக்கு யார் தலைவராக வந்தாலும் – ஜசெகவைச் சேர்ந்த இராமசாமிக்கு ஏன் அக்கறை?

ஒரு கட்சியின் பேராளர்கள்தான் அந்தக் கட்சியின் பல நிலைகளிலுமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். ஜனநாயக முறைப்படி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் சுப்ரா – மஇகாவில் எழுந்த சட்டப் பிரச்சனையால் மஇகாவின் இடைக்காலத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றார்.

அவர் சரியான தேர்வா என்ற முடிவைச் செய்ய வேண்டியது மஇகா தலைவர்கள் – மற்றும் அவரது எதிர்காலச் செயல்திட்டங்களும்தான்!

ஆனால் அதற்குள்ளாகவே, அவர் மோசமான தேர்வு என இராமசாமி கூறியிருப்பதும் தனிப்பட குரோதம் காரணமாகத்தான் என்பதும் – பழனிவேலுவிடம் இராமசாமி கொண்டிருக்கும் நட்பின் வெளிப்பாடாகவும்தான் தெரிகின்றதே தவிர, ஒரு முதிர்ச்சியான அரசியல் கருத்தாகப் பார்க்க முடியவில்லை.

ஜசெக மத்திய செயலவைக்கே தேர்ந்தெடுக்கப்படாத இராமசாமி மோசமான தேர்வா?

அப்படிப் பார்த்தால், கடந்த ஜசெக உட்கட்சித் தேர்தலில், துணை முதல்வராக இருக்கும் இராமசாமி, அந்தக் கட்சியின் ஒரு மத்திய செயலவை உறுப்பினராகக் கூட தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படவில்லை.

அதற்காக அவரை மோசமான தலைவர் என்று கூறுவது நியாயமா? இருப்பினும் அப்படிக் கூறாமல், அந்தக் கட்சியின் தலைமை அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தது.

ஆனால், டாக்டர் சுப்ராவோ மஇகா பேராளர்களால் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரைப் பார்த்து, தனது கட்சியில் ஒரு மத்தியச் செயலவைக்கே தேர்ந்தெடுக்கப்பட முடியாத இராமசாமி – மோசமான தலைவர் என்று கூறுவது கேலிக்கூத்து மட்டுமல்ல – அதில் இராமசாமியின் தனிப்பட்ட அரசியல் வஞ்சமும் வெளிப்பட்டிருக்கின்றது.

MIC-logoதாய்க்கட்சி என்ற முறையிலும், ஓர் இந்தியர் என்ற முறையிலும் மஇகா பற்றி இராமசாமி கருத்து சொல்வதில் தவறில்லை.

ஆனால், இதுபோன்ற அரசியல் நாகரிகமற்ற கருத்துகளாலும், வரம்பு மீறிய தலையீடுகளாலும் –

தனிநபர் தாக்குதல்களாலும் – மற்ற கட்சி விவகாரங்களில் தலையிட்டுத் தனது கருத்துக்களைப் பதிவு செய்யும் முயற்சிகளாலும் –

மோசமான தலைவராகப் பெரும்பான்மையோர் கணிக்கும் பழனிவேலுவை –

இன்னும் ஏதோ இந்தியச் சமுதாயத்திற்குக் கிடைத்த – வாராமல் வந்துதித்த கண்மணி போன்று பாதுகாத்து அறிக்கை விடுவதாலும் –

அதிலும் பழனிவேலுவை இழப்பதால் இந்தியர் வாக்குகளை நஜிப் இழந்து விடுவார் என்ற அரிய கண்டுபிடிப்பை – தான் சார்ந்திருக்கும் ஜசெகவின் கட்சிக் கொள்கைகளுக்கு முரணாகக் கவலைப்பட்டு வெளியிடுவதாலும் –

கடந்த காலங்களில்  தனது அறிவாற்றலாலும் – அரசியல் களப் பணிகளாலும் தனியிடத்தைப் பிடித்திருக்கும்  இராமசாமி –

தன் கௌரவத்தையே கெடுத்துக் கொள்கின்றார் என்பதும் –

அவரது சுயமரியாதையையும் அவரே கெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதும் –

தனது அறிக்கைகளால் தன்னையே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது!

-இரா.முத்தரசன்