கோலாலம்பூர், ஜூன் 30 – சர்ச்சையாகி இருக்கும் மஇகா விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க முனைந்த பிபிபி தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் ஓர் உறுப்பினரை நீக்கும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும், கட்சிக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் மட்டுமே ஓர் உறுப்பினர் தனது உறுப்பியத்தை இழப்பார். மாறாக, மற்ற தரப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் தனது உறுப்பியத்தை இழக்கமாட்டார் என்றும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
இதன் தொடர்பில் ஓர் உறுப்பினர் தனது உறுப்பியத்தை இழந்ததை உறுதி செய்யும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இல்லை என்றும் கேவியஸ் கூறியதாக நேற்றைய மக்கள் ஓசை நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
டத்தோ முருகையா பதில் அறிக்கை
இதனைத் தொடர்ந்து முன்பு பிபிபி கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், தற்போது மஇகாவில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான டத்தோ டி.முருகையா கேவியசுக்குப் பதில் கொடுத்துள்ளார்.
“பிபிபி விவகாரத்தில் சங்கப்பதிவகம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொண்ட டான்ஸ்ரீ கேவியஸ், தற்போது மஇகா விவகாரத்தில் அதே சங்கப் பதிவகத்தின் உத்தரவில் தவறு காண்பது ஏன்?” எனப் பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சருமான அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நம் கண் முன்னே நிகழ்ந்தவற்றையும், வரலாற்றையும் மறந்துவிட்டுப் பேசுவது சரியல்ல என்றும் அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார். மஇகா விவகாரத்தில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்கப் போவதாகப் பிரதமரே அறிவித்துள்ளதை டான்ஸ்ரீ கேவியஸ் உட்பட அனைவருமே நினைவில் கொள்வது நல்லது” என்றும் முருகையா நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நஜிப், தெங்கு அட்னான் கருத்துக்களைக் கவனியுங்கள்
“மஇகாவில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தெளிவாகவும் உறுதியாகவும் தனது முடிவைத் தெரிவித்துள்ளார். சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்கப் போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளது நியாயமானது, வரவேற்கத்தக்கது. அதேசமயம் சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளைச் சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னானும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே தற்போதுள்ள விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தாமல், மஇகாவின் அனைத்துப் பிரிவினரும் பிரதமரும் சங்கப் பதிவகமும் கூறியதை ஏற்றுச் செயல்பட வேண்டும்,” என முருகையா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
பிபிபி விவகாரத்திலும் சங்கப் பதிவகம் கடந்த காலங்களில் முடிவெடுத்தது
பிபிபி விவகாரத்திலும் கூட கடந்த காலத்தில் சங்கப் பதிவகத்தை அணுக வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அப்போது சங்கப் பதிவகம் பிறப்பித்த உத்தரவு டான்ஸ்ரீ கேவியசுக்கு ஆதரவாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
“அச்சமயம் சங்கப் பதிவகத்தின் உத்தரவு டான்ஸ்ரீ கேவியசுக்கு நியாயமாகப் பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து அவரால் சிலர் நீக்கப்பட்டது செல்லும் என்றும் சங்கப் பதிவகம் அப்போது அறிவித்தது. அன்று சங்கப் பதிவகம் இவ்வாறு உத்தரவிட்டதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் டான்ஸ்ரீ கேவியஸ். ஆனால் இப்போது மஇகா விவகாரத்தில் மட்டும் சங்கப் பதிவகம் பிறப்பித்த உத்தரவு சரியல்ல என்று அவர் கூறுவதை ஏற்க இயலாது” என்றும் கேவியசின் முரண்பாடுகளை முருகையா சுட்டிக்காட்டியுள்ளார்.
தோழமைக் கட்சிகள் விவகாரத்தில் தலையிடாதீர்கள்
“அதிலும் இன்னொரு கட்சியில் நடக்கும் விவகாரம் தொடர்பில் அவர் கருத்துரைத்திருப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? சங்கப் பதிவகம் அரசு சார்ந்த நிறுவனம். அதற்கெனச் சட்டங்கள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் செயல்பட்டு, நியாயமான முறையில், அனைத்துச் சட்டப்பூர்வ அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உரிய ஆலோசனைக்குப் பிறகே, சங்கப் பதிவகம் தனது அறிவிப்புகளை வெளியிடுகிறது. குறிப்பாக, மஇகா அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ளதை நன்கு ஆராய்ந்த பிறகே இம்முறை தனது முடிவை அறிவித்துள்ளது. எனவே அதில் குற்றம் காண்பது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல” என்றும் முருகையா தெரிவித்துள்ளார்.
“சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் கொண்டிருந்த சங்கப் பதிவகத்திற்கு இப்போது மட்டும் திடீரென அந்த அதிகாரம் இல்லை என டான்ஸ்ரீ கேவியிஸ் சொல்ல முற்படுகிறாரா? கடந்த காலத்தில் இதே சங்கப்பதிவகத்தின் உத்தரவின் பேரிலேயே தானும் பிபிபி தலைவராகப் பொறுப்பேற்றதை டான்ஸ்ரீ கேவியஸ் மறந்துவிட்டாரா?” எனவும் முருகையா கேள்வி எழுப்பியுள்ளார்.
சங்கப் பதிவகம் நியாயமான முறையில் செயல்படுகிறது எனப் பிரதமரும் உறுதியாக நம்புகிறார் என்பதை அவரது அண்மைய அறிவிப்பில் இருந்து தெளிவாக உணர முடிவதாகக் கூறியுள்ள அவர், கடந்த கால சம்பவங்களை வசதியாக மறந்துவிட்டு, சங்கப் பதிவக உத்தரவுகள் தொடர்பில் யாரும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.