Home இந்தியா ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற முடிவுகள் பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்!

ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் சட்டமன்ற முடிவுகள் பிற்பகலுக்குள் அறிவிக்கப்படும்!

672
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 30 – இன்று வெளியிடப்படவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெல்வது உறுதி என்றாலும், எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார் என்பதுதான் இப்போது தமிழகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வியாகும்.

jayalalithaaஇந்திய நேரப்படி காலை 8.00 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும். இயந்திரங்கள் மூலமான வாக்கு எண்ணிக்கை என்பதால் வாக்குகள் எண்ணப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே எத்தனை வாக்குகள் முன்னணி என்ற விவரம் தெரிந்து விடும்.

14 மேசைகளில், 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.

ஏற்கனவே, தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டு விட்ட ஜெயலலிதா, இன்று ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெற்றி வாகை சூடி, தமிழகச் சட்டமன்றத்தில் காலடி வைப்பார்.

Jayalalitha after winning 2011 Tamil Nadu State Electionsஇதற்கு முன்பு ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், தமிழக முதல்வர் பதவியையும், இழந்த ஜெயலலிதா, வழக்கில் வெற்றி பெற்றதும் முதல் கட்டமாக, மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

இன்று, சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று மீண்டும் தமிழக அரசியலில் முழுமையான தீவிரத்துடன் தொடர்ந்து ஈடுபடும் தகுதியை இன்றைய வெற்றியின் மூலம் ஜெயலலிதா பெறுவார்.

அவரது அடுத்த இலக்கு அடுத்த ஆண்டுக்குள் நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பதவியேற்பதும், அதிமுக கட்சியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதும்தான்!

இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கிலும் அவர் தனக்குச் சாதகமான முடிவைப் பெற்றாக வேண்டும்.