கோலாலம்பூர், ஜூலை 1 – பிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியசுக்கு எதிராக மஇகா-சங்கப் பதிவக விவகாரத்தில் அறிக்கை விடுத்திருந்த முன்னாள் டத்தோ டி.முருகையாவுக்கு பிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ காந்தி முத்துசாமி பதில் கொடுத்துள்ளார்.
“டான்ஸ்ரீ கேவியெஸ், பத்திரிகையில் வெளியிட்டிருந்த ஆர்.ஓ.எஸ் மீதான கருத்தைக் கவனமாகப் படித்து, கிரகித்துக் கொள்ளக் கூடியவருக்கு மட்டுமே டான்ஸ்ரீ சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.பிறர் படித்துக் கேட்பவர்களுக்குச் செவிச் செல்வம் இருந்தால் மட்டுமே டான் ஸ்ரீயின் உட்கருத்தைப் புரிந்திருக்க வாய்ப்பு உண்டு . செவிச் செல்வமும் இல்லாமல், படித்ததைக் கிரகிக்கும் தன்மையும் இல்லாமல், அறிக்கை ஆயுதமாகச் செயல்படும் டத்தோ முருகையாவின் நிலையைக் கண்டு பரிதாபப் படுகிறேன்” என முத்துசாமி தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
“அன்று பிபிபி கட்சியில் நடந்த விவகாரத்தைக் காரணம் காட்டி, டத்தோ முருகையா டான் ஸ்ரீ கேவியசின் அறிக்கையின் மேல் கேள்வி எழுப்பி உள்ளார். டான் ஸ்ரீ கேவிஎஸ் சங்கப்பதிவகத்தின் முடிவில் தவறு காண்பதாகச் சட்ட வல்லுனர் பாணியில் அறிக்கை விட்டிருப்பது சாதாரண பாமரனுக்கும் ஒரு நகைச்சுவைச் செய்தியாகத்தான் இருக்கிறது. ம.இ.கா விவகாரத்தில் சங்கப் பதிவகம் எடுக்கும் முடிவைக் குறித்து டான் ஸ்ரீ வியாக்கியானம் செய்யவில்லை. கட்சி நிலையில் சங்கப் பதிவகத்தின் அதிகார எல்லையை அவர் எடுத்துக் கூறி உள்ளார்” என்றும் முத்துசாமி விளக்கியுள்ளார்.
மேலும் அவர் பின்வருமாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்:-
“கட்சியின் உறுப்பினரைக் கழிக்கவோ கூட்டவோ சங்கப் பதிவிலாகாவிற்கு அதிகாரம் கிடையாது. கட்சியைத் தவிர்த்து வேறு எந்தத் தரப்பினர் மீதும் வழக்கு தொடுத்தால் கட்சி உறுப்பியத் தகுதியை எந்த வகையிலும் பாதிக்காது. கட்சியின் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்னும் அதிகாரப் பூர்வமாகச் செயல்படும் போது அவருக்கு ஆதரவாக இருப்பது கட்சியினருக்கு அழகு” என்பதைக் கட்சி சட்டத்திற்கு உட்பட்ட கருத்தை டான் ஸ்ரீ கேவிஎஸ் பத்திரிகையில் சொல்லியிருப்பதை” வேறு திசைக்குத் திருப்பி, தனது அறிக்கையால் மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறார் டத்தோ முருகையா”
“பிபிபி விவகாரத்தில் கட்சிச் சட்டத்திற்கு உட்பட்டு ஆர்.ஓ. எஸ் அறிவித்த முடிவை ஏற்றுக் கொண்டார் டான் ஸ்ரீ கேவிஎஸ். ம.இ.கா விவகாரத்திலும் சட்டத்திற்கு உட்பட்ட நிலையையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனை விளங்கிக் கொள்ள முடியாத டத்தோ முருகையா, தமது அறிக்கையில் சுயமாக நிற்கமுடியாமல்,”பிரதமர் ஏற்றுக் கொண்டார். அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று பிரதமர் சொன்னதாகக் கூறி தன்னுடைய அறிக்கைக்குப் பலம் சேர்க்க பிரதமரின் பெயரை விற்பனை செய்கிறார்”
“அன்று பிபிபி தலைமைத்துவப் பிரச்சினையின் போது, டான்ஸ்ரீ கேவிஎஸ் கூட்டிய அவசரக் கூட்டத்திற்கு வராமல் போன முருகையாவின் முடிவு குறுக்கு வழியும், சதியும் கொண்ட நோக்கம் என்பதை அவர் வாயால் என்னிடம் கூறியபோது திகைப்புற்றேன்.”
“நான் கூட்டத்திற்கு வராத தருணத்தில், தலைவர் கூட்டத்தில் தவறு இழைப்பாரானா ல், அவரை வீழ்க்க அதுவே எனது ஆயுதமாகப் பயன்படுத்துவேன்” என்று முருகையா பதில் கூறியபோது அவரின் “இரண்டாவது” முகம் அன்று வெளிப்பட்டது .”
“காலியான பெருங்காய டப்பாவில் வாசனை அதிகமாகத்தான் வீசும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்பதால், கட்சியின் நலனை முன் நிறுத்தாத,குறுக்கு வழியில் உயரப் பறக்கத் துடிக்கும் முருகையா ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது”
-இவ்வாறு காந்தி முத்துசாமி முருகையாவுக்கு பதில் கொடுத்துள்ளார்.