கோலாலம்பூர், ஜூன் 30 – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடல்நிலை குறித்த தனது கவலை மற்றும் அக்கறையை பிரதமர் நஜிப் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தமது நட்பு ஊட்கப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அன்வாருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அன்வாரின் உடல்நிலை குறித்து நான் கவனத்தில் கொண்டுள்ளேன். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்” என அப்பதிவில் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.
அன்வாரை வீட்டுச் சிறையில் வைப்பதன் வழி அவர் உரிய சிகிச்சைப் பெற முடியும் என அவரது வழக்கறிஞர் சிவராசா அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து பிரதமரின் மேற்கண்ட பதிவும் வெளியாகியுள்ளது.
சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவர் உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சிவராசா சாடியிருந்தார்.
ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற அன்வார் இப்ராகிம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.