சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டதாகத் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன என்பதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஓர் உதாரணம். எண்ணற்ற தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றும் அவற்றைக் கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது.
அ.தி.மு.க.வினர் பலவந்தமாகப் பூத்துகளுக்குள் புகுந்து வாக்களித்தார்கள். பண விநியோகம் தாராளமாக நடந்தது.
சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கப்பட்டு அடக்கப்பட்டார்கள். டிராபிக் ராமசாமி மிரட்டப்பட்டு அவர் மீது தாக்குதலே நடத்தப்பட்டது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய சாலைகள் போடப்பட்டன. தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கூட்டணி அமைத்து ஆளும் கட்சிக்கு உதவி செய்து அமைதி காத்தன.
மொத்தத்தில் இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகமாகவே அமைந்து விட்டது.
ஜனநாயகத் தேர்தல் நடைமுறைகளை நொறுக்கித் தள்ள ஆளும் கட்சிக்குத் தாராளமாக அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி நடத்திய பயங்கரவாதத்தைப் பார்க்கும்போது, வருகின்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தல் எப்படி நடக்கும்? என்பதைக் கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான்.
மாற்றுக் கருத்து கூறுபவர்களும், ஜனநாயக மாண்புகளும் அ.தி.மு.க. ஆட்சியில் நசுக்கப்படுவதை அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் உயிர் மூச்சுடன் நிலைத்து இருக்க, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஜனநாயகத்தைச் சீர்குலைக்க நடக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கத் தி.மு.க. போராடும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.