Home கலை உலகம் முதல் காட்சி திரைவிமர்சனம்: தங்க மீன்கள் – பொக்கிஷம்!

முதல் காட்சி திரைவிமர்சனம்: தங்க மீன்கள் – பொக்கிஷம்!

1035
0
SHARE
Ad

downloadஆகஸ்ட் 30 –  “என்னை எங்கம்மா திட்டிட்டாங்க. நான் சாகப் போறேன் டி” என்று அழுது கொண்டே ஒரு குழந்தை மற்றொரு குழந்தையிடம் சொல்கிறது.

“எப்ப சாகப் போற?” என்று அந்த மற்றொரு குழந்தை கேட்கிறது.

“நாளைக்கு காலையில சாகப் போறேன். ஏன்னா இன்னைக்கு நைட்டு எங்க வீட்டுல பூரி செய்றாங்க. எனக்கு பூரின்னா ரொம்ப பிடிக்கும்” என்று அந்த குழந்தை பதில் சொல்கிறது அப்பாவியாக.

#TamilSchoolmychoice

குழந்தைகளின் மனநிலையை அற்புதமாக காட்டியிருக்கும் ஒரு சிறந்த திரைப்படம்  “தங்க மீன்கள்”.

“கற்றது தமிழ்” ராம் இயக்கத்தில் 5 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் அற்புதப் படைப்பு.

குழந்தைகளைப் பற்றி புரிந்துகொள்ள நினைக்கும் அனைத்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

படத்தில் ஆங்காங்கே திரைக்கதையில் சில விரிசல்கள் இருந்தாலும், கதாபாத்திரங்கள், ஒளிப்பதிவு, பாடல்கள் என்று அத்தனையிலும் சுவாரஸ்யங்களையும், எதார்த்தங்களையும் அள்ளித் தந்திருக்கும் படம்.

யுவன் சங்கர் ராஜா இசையிலும், நா.முத்துக்குமார் வரிகளிலும் ஆனந்த யாழை மீட்டுகிறது, நதி வெள்ளம் போன்ற பாடல்கள் முத்துக்கள்.

அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம் அளிக்கிறது. படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வாழ்கிறது. குறிப்பாக ராமின் மகளாக நடித்திருக்கும் செல்லம்மா கதாப்பாத்திரம்.

குழந்தையின் நிஜப் பெயர் சாதனா. இவ்வருடத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திர விருது காத்திருக்கிறது இவளுக்கு.

மற்றபடி, இயக்குனர் ராம், பூ ராம், ரோகிணி, ஷெல்லி (அறிமுகம்), பத்மப்பிரியா ஆகியோரின் நடிப்பு மனதைத் தொடுகிறது.

கதைச் சுருக்கம்

நாகர்கோயில் பக்கம் ஒரு அழகிய கிராமம். நல்லாசிரியர் விருது பெற்று கொஞ்சம் காசு, பணத்தோடு வாழும் தந்தை (பூ ராம்). ஆனால் அவருக்கு ஒரு உருப்படாத மகன் கல்யாண சுந்தரம் (இயக்குனர் ராம்).

12 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஒரு பெண்ணை காதலித்து அவளை கல்யாணமும் செய்து ஒரு பெண் குழைந்தையும் பெற்றவன்.

ஆனாலும் குடும்பப் பொறுப்பு இன்றி எந்த ஒரு வேலை வெட்டிக்கும் ஒழுங்காக போகாமல் அந்த ஊரிலேயே சின்ன சின்ன வேலைகளை செய்து கஷ்டப்படுகிறான்.

தன் மகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியாமல் திணறுகிறான். ஆனாலும் தன் மகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவன்.

ஆனால் மகள் செல்லம்மாவோ மிகவும் வெகுளிப் பெண். அவளுக்கு படிப்பு பிடிக்காது. ஸ்கூலுக்குப் போவது பிடிக்காது. ஆனால் அதி புத்திசாலி. ஒரு கேள்விக்கு இரண்டு விதமான பதிலை அளிக்கக் கூடிய அளவிற்கு புத்திசாலித்தனம் இருப்பதாலோ என்னவோ அவளை அந்த பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் யாருக்கும் பிடிக்காது.

செல்லம்மாவின் தாத்தாவும் (பூ ராம்), பாட்டியும் (ரோகிணி) அவளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் கல்யாணசுந்தரம் அதற்குத் தடையாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில், குழந்தையை சரியாக வளர்க்கத் தெரியலன்னா ஏண்டா பெத்துக்குற என்று தந்தை கேட்க, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ரோஷம் வந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் ராம்.

கொச்சினில் இரவு, பகலாக வேலை செய்கிறார். அவருக்கு ஒரே லட்சியம் மகள் ஆசைப்பட்டு கேட்ட நாய் குட்டியை வாங்கிக் கொடுப்பது தான்.

அவர் கொண்ட லட்சியத்தில் ஜெயித்தாரா? குழந்தை கேட்டதை ஆசையோடு வாங்கிக் கொண்டு வரும் போது செல்லம்மாவிற்கு என்ன நேர்ந்தது? இங்கு தான் படத்தின் முடிவு இருக்கிறது.

படத்தின் பலம்thanga-meengal-movie-new-stills-10

தங்க மீன்கள் படத்தின் பலம் என்றால் இப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை கதாப்பாத்திரங்களையும் சேரும். செல்லம்மாவின் நடிப்பு சில காட்சிகளில் பார்ப்பவர்களின் மனதை அவர்களை அறியாமலேயே கொள்ளை கொண்டு விடுகிறது.

என்ன கேட்டுவிட்டாள் ஒரு நாய் குட்டி தானே என்று நீங்களே வாங்கிக் கொடுத்துவிட நினைப்பீர்கள். அந்த அளவிற்கு மிக இயல்பாக நடித்திருக்கிறாள்.

அடுத்து, படத்தில் இடம் பெறும் வசனங்கள்.

“கடன் கேட்க வரும் மாமா வீட்டுக்குள் வர மாட்டார்கள்”,

“கடன் இல்லைன்னா சொல்லிப் பழகுங்க டா… அதைவிட்டுட்டு நாலு நாளா அலைய விடாதீங்க”, “எங்க அப்பாக்கு கஷ்டம் குடுக்க வேணாம்னு நானே கலர் பென்சில திருடிட்டேன்”போன்ற வசனங்கள் நிஜ வாழ்வின் எதார்த்தங்களைப் புரிய வைக்கின்றன.

படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அருமை. கதைக்கேற்ற களங்களிலேயே கேமெரா தொடர்ந்து பயணிப்பது அலுப்பைத் தரவில்லை.

படத்தில் மூன்று பாடல்கள் இருந்தாலும் முத்தான ரகம் …. இனிக்கிறது..

Thanga-Meengalபடத்தின் பலவீனம்

திரைக்கதையில் ஆங்காங்கே சில குழப்பங்களும், ஏமாற்றங்களும் இருக்கின்றன.

எவிட்டா டீச்சர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பத்மப்பிரியா வாழ்வில் என்ன பிரச்சனை? அவர் ஏன் கணவருக்கு பயந்து   நடுங்குகிறார்? என்று நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்குள் கதை நகர்ந்து விடுகிறது.

நல்லாசிரியர் விருது பெற்ற ஒரு தலைமையாசிரியருக்கு மகனாய் பிறந்தும் சிறு வயதில் படிக்காமல், காதலித்துத் திரிந்து தன் வறுமைக்கு தானே காரணமாகி விட்டு, படத்தின் இறுதியில் தன்னையும், தன் மகளையும் பிரித்தது தனியார் பள்ளிகள் தான் என்று அதன் மீது பழியைப் போடுவது என்ன நியாயம்?

போனில் பேசும் போது அப்பாவின் இருமலை வைத்தே அவருக்கு உடம்பு சரியில்லை என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவுள்ள சிறுமிக்கு, அந்த நாய் குட்டி விலையுயர்ந்தது, தன் அப்பாவிடம் அதை வாங்கும் அளவிற்கு காசு இல்லை என்று தெரியாதா?

அவளுக்குத் தெரியும் தெரியும் என்று கடைசி வரை தந்தை கதாப்பாத்திரம் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறதே தவிர சிறுமிக்கு அது புரிந்ததா? இல்லையா என்பதில் அழுத்தமான காட்சிகள் இல்லை.

இது போன்ற திரைக்கதையில் சின்ன சின்ன தொய்வுகள் இருந்தாலும் தங்க மீன்கள் அனைவரையும் கவரும் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை.

இவ்வாண்டு இறுதிக்குள் இதை விட சிறந்த படங்கள் வராவிட்டால், “தங்க மீன்கள்” படத்திற்கு விருது நிச்சயம்!

“தங்க மீன்கள்”  செல்லம்மா – ஒரு பொக்கிஷம்..

– பீனிக்ஸ்தாசன்

தங்க மீன்கள் பட முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைய வழித் தொடர்பு மூலம் காணலாம்

http://youtu.be/DQVvcCvv9-Y