Home கலை உலகம் ‘வெண்ணிற இரவுகள்’ – மனதை வருடும் காதல் கதை!

‘வெண்ணிற இரவுகள்’ – மனதை வருடும் காதல் கதை!

1024
0
SHARE
Ad

1377355_273131152842432_968004978_n-300x254கோலாலம்பூர், பிப் 24 – பிரகாஷ் ராஜாராம் இயக்கத்தில் விகடகவி மகேன் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி நடிப்பில் புதிதாய் வெளிவரவிருக்கும் மலேசியத் திரைப்படம் ‘வெண்ணிற இரவுகள்’. வரும் மார்ச் 6 ஆம் தேதி மலேசியா முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் வெளிவருவதற்கு முன்பே, பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் நோர்வே திரைப்பட விழா மற்றும் தமிழ்நாடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தமிழகத்தின் பாலாஜி சக்திவேல் போன்ற பல முக்கிய இயக்குநர்களின் பாராட்டுக்களை குவித்ததுள்ளது.

அண்மையில் பிரபல நடிகர் பப்லு பிரித்திவிராஜை சந்திக்க நேர்ந்த போது, ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படம் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசினார். சென்னை திரைப்பட விழாவில் தான் இந்த திரைப்படத்தை பார்த்தாகவும், மிக வித்தியாசமான திரைக்கதையை கொண்ட படம் என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள மகேனும், கதாநாயகி சங்கீதாவும் மிக இயல்பாக நடித்துள்ளனர் என்றும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இத்திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (20-2- 14) அன்று பத்திரிக்கையாளர்களுக்கும், மலேசியாவின் முக்கிய பிரபலங்களுக்கும் சிறப்புக் காட்சியாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்து வெளியே வந்த அனைவரும் ‘வெண்ணிற இரவுகள்’ குறித்து வெகுவாக பாராட்டினார்கள்.

‘வெண்ணிற இரவுகள்’ – திரை விமர்சனம்

முதலில் ‘வெண்ணிற இரவுகள்’ திரைக்கதைக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும். காரணம் வழக்கமான சினிமா பாணியில் இருந்து இத்திரைக்கதை மாறுபட்டு நிற்கிறது. மியன்மார் நாட்டில் ஆரம்பிக்கும் கதை, ஆங்காங்கே தன் நினைவுகளை மலேசியாவில் பதிக்கிறது. கல்லூரி காலத்தில் மகேன் மற்றும் சங்கீதாவுக்கும் இடையே உருவாகும் காதலை ‘அணில் குரங்கு’ கதை மூலம் சொல்லப்பட்ட விதம் காதலின் மீது இயக்குநர் கொண்ட ரசனையை காட்டுகின்றது.

மியன்மார் நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை சூழலை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டியிருக்கும் இப்படத்தில், மகேன் சங்கீதா ஆகிய இருவரும் தங்களது இயலபான நடிப்பால் அசத்தியிருக்கிறார்கள்.

படத்தில் பல இடங்களில் பேசப்பட்டிருக்கும் ‘நச்’ வசனங்கள் நெஞ்சை அள்ளுகிறது. சங்கீதா தனது வசன உச்சரிப்பால் மெய்சிலிர்க்க வைக்கிறார் என்றால், மகேன் தனது உடல்மொழியால் அனைவரையும் கவர்கிறார்.

படம் தொடங்கியது முதல் இறுதி வரை, நம்மை இருக்கையில் கட்டிப் போட்டுவிடும் அளவிற்கு, காதலும், நகைச்சுவையும், காட்சியமைப்புகளும், பின்னணி இசையும் மனதை வருடுகின்றன.

கதாப்பாத்திரங்கள்

ரமேஷாக மகேனும், மேகலாவாக சங்கீதாவும் கதையில் வாழ்ந்திருக்க, படத்திற்கு பக்க பலம் சேர்க்க இன்னும் சில முக்கியக் கதாப்பாத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

மகேனின் அப்பாவாக சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல நடிகர் மதியழகன், மேகலாவின் அண்ணனாக வரும் நமது மலேசிய நடிகர் லோநாதன் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டேவிட் ஆண்டனி வரும் காட்சியில் திடீரென விசில் சத்தமும், கரவொலியும் திரையரங்கில் பரவியது. அவரது வித்தியாசமான தோற்றமும், நடிப்பும் அற்புதம்.

இது தவிர மியன்மாரில் வாழும் பல தமிழர்கள், கதையில் அவ்வப்போது மிக இயல்பாக வந்து போகின்றனர். அவர்களின் தொழில் சார்ந்த பதிவுகள் அனைத்தும் அருமை.

ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு

மலேசியா, மியன்மார் மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும், காட்சிகள் மிகத் துல்லியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனோ வி நாராயணன் ஒளிப்பதிவில் மியன்மாரின் அழகு மிளிர்கிறது. அங்குள்ள சாலைகள், கிராமங்கள், நதிக்கரை ஆகிய காட்சிகள் ரம்மியமான மனநிலையை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றது.

நிறைய காட்சிகள் வெளிப்புறப் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. கதாப்பாத்திரங்கள் பேசும் வசனங்களை தேவையற்ற இரைச்சலின்றி தெளிவாக ஒலிப்பதிவு செய்துள்ளார் செந்தில் குமரன் முனியாண்டி.

இசை 

லாரன்ஸ் சூசையின் பின்னணி இசையும், பாடல்களும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் அருமை. யுவாஜி, கோகோ நந்தா, ஷீசை, ஆகியோர் பாடல்வரிகள் எழுதியுள்ளனர்.

வழக்கமான மசாலா படம் போல் அல்லாமல், அற்புதமான காதல் கதையை, பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் கொடுத்த இயக்குநர் பிரகாஷ் மற்றும் குழுவினருக்கு செல்லியலின் சார்பாக வாழ்த்துகள்.

இவ்வருடம் வெளிவரும் மலேசியப் படங்களில் மிகப் பெரிய வெற்றிப்படமாக ‘வெண்ணிற இரவுகள்’ அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு திரைப்படம் – ‘வெண்ணிற இரவுகள்’

– பீனிக்ஸ்தாசன்