நியூ யார்க், ஜூன் 5 – உலகப் புகழ்பெற்ற அமெரிக்க கேளிக்கை நிறுவனமான வால்ட் டிஸ்னி, தங்களது தொழில்நுட்ப பிரிவுகளில் 250 அமெரிக்கர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு அவர்களின் இடத்தை இந்தியர்களைக் கொண்டு நிரப்பி உள்ளது, அமெரிக்காவில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வால்ட் டிஸ்னியின் தொழில்நுட்ப பிரிவுகளில் பணியாற்றும் 250 அமெரிக்கர்கள் தங்களது வேலை தொடர்பான பணி நீக்க கடிதத்தை பெற்றனர். இது தொடர்பாக அவர்கள் விளக்கம் கேட்டதற்கு நிறுவனத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வேலை இழக்கும் ஒவ்வொரு ஊழியர்களும் தங்களது பணி குறித்த தகவல்கள் மற்றும் பயிற்சிகளை புதிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தில் சிறிய சலசலப்புகள் எழுந்து இருந்தாலும், தற்போது அந்த பணி இடங்களுக்கு இந்தியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது ஊடங்கங்களிலும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
எச் 1-பி விசாக்களை வைத்திருக்கும் இந்தியர்களுக்கு எப்படி தொழில்நுட்ப பிரிவுகளில் பணி வாய்ப்பினை வால்ட் டிஸ்னி வழங்கி உள்ளது என பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள டிஸ்னி நிர்வாகிகள், “ஊழியர்களின் பணி நீக்கம் என்பது நிறுவனங்களின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கிய அங்கமாகும். நாங்கள் பணி நீக்கத்தைக் காட்டிலும், அதிகப்படியான பணி வாய்ப்புகளையே ஏற்படுத்தி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், அமெரிக்கர்கள் நீக்கப்பட்டு இந்தியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளது, விரைவில் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.