கோலாலம்பூர், ஜூன் 5 – ஆப்பிள் வாட்ச் ஜூன் 26-ம் தேதி முதல் சிங்கப்பூர் உட்பட ஏழு நாடுகளில் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல், டிம் குக்கின் தலைமையில் புதிய தயாரிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ஆப்பிள் வாட்ச், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. முன்பதிவுகள் துவங்கிய சில மணி நேரங்களில் மே மாதம் வரைக்கும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் நேற்று மேலும் ஏழு நாடுகளில் ஆப்பிள் வாட்ச்சின் விற்பனையை தொடங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஜெஃப் வில்லியம்ஸ் கூறுகையில், “ஆப்பிள் வாட்ச் மீதான எதிர்பார்ப்புகள் எங்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடத்தில் ஆப்பிள் வாட்சை கொண்டு சேர்ப்பதில் நாங்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “வரும் ஜூன் 26-ம் தேதி முதல், சிங்கப்பூர், இத்தாலி, மெக்ஸிகோ, ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு நாடுகளில் ஆப்பிள் வாட்சை வெளியிட திட்டமிட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் www.apple.com அல்லது ஆப்பிள் ஸ்டோர்களில் ஆப்பிள் வாட்சை பெற்றுக் கொள்ளலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட்’ (Apple Watch Sport), ‘ஆப்பிள் ஸ்டைன்லெஸ் ஸ்டீல்’ (Apple Stainless Steel) மற்றும் ‘ஆப்பிள் வாட்ச் எடிசன்’ (Apple Watch Edition) என மூன்று ரகங்களில் வெளியாகி உள்ள ஆப்பிள் வாட்ச், திறன் கருவிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.