கோலாலம்பூர் – எங்கோ ஒரு இணையதளத்தில், சிலாங்கூர் இளவரசர் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறப்பட்ட தகவலை எந்த ஒரு விசாரணையும், ஆய்வும் செய்யாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது ஒரு பாமரனாக இருந்தால் சமாதானம் அடையலாம். ஆனால் அதை வெளியிட்டது ஒரு மாநிலத்திற்கே முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டான்ஸ்ரீ ராஹிம் தம்பிசிக் தான், தனது பேஸ்புக் பக்கத்தில் அக்கருத்தைப் பதிவு செய்து, சிலாங்கூர் அரச குடும்பத்தையையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தான் செய்த தவறுக்காக, மலாய், ஆங்கிலம் என பல மொழிகளில் பேஸ்புக்கில் எழுதி மன்னிப்புக் கேட்டு வருகின்றார்.
அவரது மன்னிப்பை சிலாங்கூர் அரண்மனை ஏற்றுக் கொள்ளுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிலாங்கூர் அரச நீதி விசாரணை சபை இன்று இந்த விவகாரம் தொடர்பில் சந்தித்துப் பேசி முடிவெடுக்கவுள்ளது.
ரஹிம் தனது பேஸ்புக்கில் பதிவு செய்த கருத்து இது தான்.
“சிலாங்கூர் பட்டத்து இளவரசர், தெங்கு அமிர் ஷா கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்ட செய்தி உலகத்திலுள்ள அனைத்து முஸ்லிம்களையும், நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோகச் செய்தி மெக்காவிலும், அரபாவிலும் இரண்டு மிகப் பெரிய பேரிடர்களை ஏற்படுத்தியுள்ளது. வேட்டிகன் நகரின் போப் ஆண்டவரை சந்திக்க எண்ணும் சிலாங்கூர் சுல்தானின் கனவும் நனவாகட்டும்”
இதை எந்த இணையதளத்திலிருந்து எடுத்திருக்கிறார் தெரியுமா? சர்ச்சைக்கே பெயர் போன ‘worldnewsdailyreport’ என்ற இணையதளத்தில் இருந்து தான்.
“பிரேசில் பெண் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டு, கர்ப்பத்தோடு வீடு திரும்பினார்” இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுவது தான் அந்த இணையதளம்.