– சென்னை கடந்த சில வாரங்களாகவே மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், வட இந்திய ஊடகங்கள் அது குறித்து பெரிய அளவில் செய்திகளை வெளியிடாமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வந்தன. உள்ளூர் அரசியல்வாதிகளும் இது தொடர்பாக அமைதி காத்த போது, இது தொடர்பாக முதல் ஆளாக, நடிகர் சித்தார்த் மட்டுமே டுவிட்டர் வாயிலாக வட இந்திய ஊடகங்களை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் சென்னையில் கன மழை தொடங்கி வெள்ளக்காடாக மாறி உள்ள நிலையில், அவரும் அவரது குழுவினரும் நேரடியாக களமிறங்கி பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 5 வாகனங்களை ஏற்பாடு செய்துள்ள சித்தார்த், மக்களுக்கு பல்வேறு வகையிலும் உணவு, இருப்பிடம் போன்றவை கிடைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இதற்கிடையே சிஎன்என்-ஐபிஎன் (CNN-IBN) நிறுவனத்திடமும் நேரடியாக பேசி கவன ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இங்கு குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான ஒன்று நடிகர் சித்தார்த்தின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது என்பது தான். அவரது வீட்டின் கீழ் தளத்தில் வெள்ளம் புகுந்துள்ளதை புகைப்படமாக பதிவேற்றி, “நடிகனான எனக்கே இப்படி ஒரு நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை யோசித்து பாருங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.