Home Featured நாடு “கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!

“கேவியஸ் தலைமையில் பிபிபி கட்சி மடியும் முன் தலைமை மாற்றம் அவசியம்” டி.மோகன் அறிவுரை!

944
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “ஜனநாயகம் என்பதை பெயரளவில் மட்டும்   வைத்துக்கொண்டு செயலளவில் அதனை செயலிழக்கச் செய்யும் பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிராக கட்சியை வழிநடத்துவது மட்டுமில்லாமல்  ஆண்டுக்கூட்டங்களில்   மற்றவர்களை சாடி கேவலமான அரசியல் நடத்தி வருகிறார். இந்த மாதிரியான போக்குகளினால் பிபிபி கட்சியை மடியச்செய்யும் முன் சொந்த கட்சியின் நலன் கருதி இவர் தனது  பதவியை ராஜினமா செய்ய வேண்டும்”  என மஇகாவின் தேசிய உதவித்தலைவர்  டத்தோ டி.மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan T-MIC“22 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தலைவர் பதவியில் அமர்ந்து செய்த சாதனை என்ன?  அடக்கி ஆளும் கொள்கையை பயன்படுத்தி பதவியை தக்க வைக்க போராடும் இவர் மலாய்,சீன சமுதாயத்தினரையும் உள்ளடக்கிய பிபிபி கட்சியை மைபிபிபி என உருமாற்றம் செய்து கொண்டு இந்திய சமுதாயத்தை மட்டும் பிரதிநிதிக்கும் கட்சியாக தோற்றம் காண்பிக்க நினைப்பது ஏன்?” என்றும் மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அரசாங்கம் கொடுத்த நிதி எல்லாம் எங்கே போனது என்று அரசாங்கத்தைத்தான் கேட்க வேண்டும். இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் வழங்கிய நிதிக்கு கணக்கு அரசாங்கத்தாலே காண்பிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களாக அனைத்து விதமான விளக்கங்களோடும் வெளிவந்துள்ளது. இது தேசிய முன்னணியின் தோழமைக்கட்சியான பிபிபி கட்சி உறுப்பினர்களுக்கும் தெரியும். பொதுமக்களும் அறிவர். இதனைக் கூட தெரிந்து வைத்துக்கொள்ளாமல் சம்பந்தம் இல்லாமல் கேள்வி எழுப்புகிறேன் என்ற பெயரில் மலிவு விளம்பரம் தேடிக்கொள்வதை டான்ஸ்ரீ கேவியஸ் நிறுத்த வேண்டும்” என்றும் கேவியசை மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“அரசாங்கம் கொடுக்கும் நிதி நேரிடையாக யாருக்கும் வழங்கப்படுவதில்லை. அரசு நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் என பல வழிகளில் கொடுக்கப்பட்டு மக்களை சென்றடைகிறது. இதனை டான்ஸ்ரீ கேவியசிற்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். வெற்று விளம்பரத்திற்காக பேசாது நடைமுறையை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன்” என்றார் மோகன்.

துணைத் தலைவர் இல்லாத கட்சி – 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் கட்சி

Kayveas-PPP assembly-2015நேற்றைய பிபிபி மாநாட்டில் தலைமையுரையாற்றும் கேவியஸ்…

“மேலும் இது  மாதிரியான போக்கை கேவியஸ் வழக்கமாகக் கொண்டுள்ளார். கட்சியின் பேராளர் மாநாடுகளில் மற்றவர்களை தாக்கி தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்பாட்டோடு செயல்படுகிறார். இவரை பொறுத்த வரையில்  ஜனநாயகத்தை மறந்து சுயநலப்போக்கில் செயல்பட வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பிபிபி  கட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தான்  கட்சித்தேர்தலை நடத்துகிறார்கள். கட்சியில் துணைத்தலைவர் கிடையாது. இந்த நிலைமை பிபிபி கட்சியை தவிர மற்ற தேசிய முன்னணி தோழமைக்கட்சிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது” என்றும் மோகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

PPP-assembly 2015-stage with Zahidநேற்றைய பிபிபி ஆண்டு மாநாட்டில் கேவியசுடன், துணைப் பிரதமர் சாஹிட், தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான்…

“என்னை பொறுத்த வரையில்  பிபிபி கட்சி சார்ந்து எந்த விதமான எதிர்ப்பும் கிடையாது. ஆனால்  நான் உற்றுநோக்கியதில் இந்த கட்சியில் உறுப்பினர்கள், அடுத்தகட்ட தலைவர்கள், சேவையாளர்கள்  என பலர் இருந்தும்  தலைமை சரியில்லாத நிலையில் மட்டுமே மக்கள் மத்தியில் பிபிபி தழைத்தோங்கவில்லை. டத்தோ முருகையா, டத்தோ சந்திரகுமணன், போன்ற  நல்ல தலைவர்கள், சமுதாய சேவையாளர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களை கட்சியை விட்டு நீக்கியது ஏன்? டான்ஸ்ரீ கேவியஸ் பதவி ஆசை பிடித்தவர். தனக்கு மேல் யாரும் வளர்ந்து விடக்கூடாது என்ற பயமும் அவருக்கு இருக்கிறது. இந்த நிலையில் இவர் சமுதாயத்தைப் பற்றி பேச லாயக்கற்றவர்” என்றும் மோகன் கூறியுள்ளார்.

“சமுதாயத்தை மனதில் நிலைநிறுத்தி அதன் வளர்ச்சி குறித்து சிந்திப்பதை விடுத்து அநாவசியமான கருத்துக்கள் இங்கே தேவையில்லை. மலேசிய அரசியலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு அடுத்த கட்ட நல்ல தலைவர்களுக்கு வழிவிட கேவியஸ் முன் வர வேண்டும். அதோடு தேசிய முன்னணியின்  தோழமைக் கட்சியான மைபிபிபி இனி அடுத்த ஆண்டு பேராளர் மாநாட்டில் அறிவுக்கு ஒப்பாத கருத்துக்கள் அரங்கேறாமல் இருக்க வேண்டுமானால் டான்ஸ்ரீ கேவியஸ் பதவி விலக வேண்டும்” என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெளிவுபடக்கூறியுள்ளார்.