விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவிகள் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு இயற்கை மருத்துவம் படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மாணவிகள் நேற்று கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தாங்கள் ஏற்கனவே 6 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அடிக்கடி 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் வசூல் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இனி, இதுபோன்ற பிரச்னை மாணவியருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டதாக அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், குறிப்பிட்ட அந்த கடிதத்தில் இருப்பது இறந்த மாணவியரின் கையெழுத்து இல்லை என்று உறவினர்கள் கூறி வருவதால், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவியர் பயின்று வந்த தனியார் கல்லூரிக்கு சீல் வைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.