புத்ராஜெயா – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் இன்று மலேசியக் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். பெர்டானா லீடர்ஷிப் பவுண்டேஷன் (Perdana Leadership Foundation) எனப்படும் அவரது அறக்கட்டளை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை சென்ற மூன்று காவல் துறை அதிகாரிகள் சுமார் அரை மணி நேரம் செலவிட்டு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.
மகாதீர் வாக்குமூலத்தை வழங்கியபோது அவருடன் ஐந்து வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.
“எனது வலைப் பதிவில் நான் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீசார் என்னிடம் கேள்விகள் கேட்டனர். எனது வலைப் பதிவு தொடர்பில் எந்தவிதக் கேள்விக்கும் நான் பதிலளிக்கவில்லை. நான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே நான் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பேன் எனக் கூறியிருக்கின்றேன்” என மகாதீர் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமர் நஜிப், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் மகாதீர், தனது போராட்டத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் மேலும் விரிவாக்கிக் கொண்டே செல்கின்றார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவர் மீது நீதிமன்றத்தில் விரைவில் குற்றம் சாட்டுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.