கோலாலம்பூர் – இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது அந்த விவாதத்தில் பிரதமர் துன் அப்துல் ரசாக்கும், துணைப் பிரதமர் சாஹிட் ஹமீடியும் கலந்து கொள்ளவில்லை.
மொகிதின் நீக்கத்தைத் தொடர்ந்து அம்னோவின் இடைக்காலத் துணைத் தலைவராக சாஹிட் ஹமீடியை நஜிப் நியமித்துள்ளார். கடந்த அம்னோ தேர்தலில் முதலாவது தேசிய உதவித் தலைவராக அதிக வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சாஹிட் ஹமீடி ஆவார்.
இன்றைய அம்னோ கூட்டத்தில் மொகிதினும் மற்றொரு உதவித் தலைவருமான ஷாபி அப்டாலும் கலந்து கொள்ளவில்லை. மொகிதின் வெளிநாட்டில் இருப்பதாகவும், ஷாபி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இன்றைய கூட்டத்தில் தங்களால் கலந்து கொள்ள முடியாது என மொகிதினும், ஷாபியும் ஏற்கனவே அம்னோ தலைமையகத்திடம் தெரிவித்திருந்தனர் என்று அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.
மொகிதினின் இடைநீக்கம் பற்றித் தெரிவித்த தெங்கு அட்னான், “மொகிதினின் நடவடிக்கைகள் துணைத் தலைவர் என்ற முறையில் அவரது பொறுப்பைப் பிரதிபலிக்கவில்லை. கட்சியைப் பலப்படுத்த தலைவருக்கும் உதவவில்லை” என்றும் கூறியதோடு, மொகிதினுக்கு எதிரான இடைநீக்கத் தீர்மானம் ஒட்டுமொத்த அம்னோ உச்சமன்றத்தால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.