கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கொப்ப, இதுவரை மலேசிய அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இருவரும் சந்தித்து நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இருப்பினும் இந்த சந்திப்பு குறித்த மேல்விவரங்களை வெளியிட லிம் கிட் சியாங் மறுத்துவிட்டார். மகாதீர் தரப்பிலிருந்தும் இந்த சந்திப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இன்று, ஜசெக சார்பில் சிலாங்கூர் மாநில அரசில் இடம் பெற்றிருக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் சந்திப்பு ஒன்றை நடத்திய லிம் கிட் சியாங் மகாதீருடனான தனது சந்திப்பு குறித்து தெரிவித்திருக்கின்றார்.
நாட்டின் நடப்பு அரசியல் விவகாரங்கள், எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும், சைட் இப்ராகிம் ஏற்பாட்டிலான நஜிப்புக்கு எதிரான பொதுக் கூட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து கிட் சியாங் மகாதீருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக அறியப்படுகின்றது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பு, எந்த நாளில் எங்கு நடைபெற்றது என்பது போன்ற விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மொகிதின் அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, மகாதீர் அம்னோவிலிருந்து தானாகவே முன்வந்து வெளியேறியது, ஆகிய அரசியல் சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என்றும்,
மகாதீர், லிம் கிட் சியாங், அன்வார் இப்ராகிமின் பிகேஆர் கட்சியினர், அம்னோ அதிருப்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் போன்ற அரசியல் சக்திகள் இணைந்து நஜிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்தைத் தொடங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேர்வதற்கு உத்தேசிக்கவில்லை என மகாதீர் அறிவித்திருக்கின்றார்.