கோலாலம்பூர் – பிரெஞ்சு இந்தியப் பெருங்கடல் தீவான ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது விமானப் பாகம் எம்எச்370-ன் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மலேசிய துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ அபு அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இதை எதிர்பார்த்தோம் காரணம் சிதறிய பாகங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் பகுதியைக் கணக்கிட்டால் அத்தீவைச் சுற்றி தான் நிறைய பாகங்கள் இருக்கின்றன”
“எனவே அந்தப் பகுதியில் எந்த ஒரு விமானப் பாகம் கிடைத்தாலும், அது எம்எச்370 விமானத்தின் பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்தப் பாகம் பின்னர் ஆய்வு செய்யப்படும்” என்று இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அபு அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரியூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் இறக்கையில் ஒரு பகுதி தான், இதுவரையில் எம்எச்370 விமானத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பாகம் ஆகும்.
கடந்த வாரம் மொசாம்பிக் தீவில் விமானப் பாகம் ஒன்று கண்டறியப்பட்டது. தற்போது அந்தப் பாகமும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், ரீயூனியல் தீவில் நேற்று இரண்டாவதாக ஒரு பாகம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.