Home Featured நாடு “சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

“சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

895
0
SHARE
Ad

ஷாஆலாம் – நேற்று ஷாஆலாமில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மஇகா அரசியல் வட்டாரங்களில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் முருகேசன் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு நெருக்கமான ஆதரவாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.

Murugesan-speaking-Peoples Congressநேற்றைய மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் உரையாற்றிய முருகேசன்….(படம்: நன்றி -ஸடார் இணையத் தளம்)

#TamilSchoolmychoice

இதுநாள்வரையில் பழனிவேல் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தவர் முருகேசன் என்பதோடு, நடப்பு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவின் அழைப்பை ஏற்று பல கிளைத் தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பிய வேளையில் முருகேசன் ஏனோ திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற நஜிப் பதவி விலக வேண்டும் எனக் கோரும் எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய முருகேசன், நாட்டில் ஊழல் பெருகிவிட்டது என்றும், இதனை யாராவது முன்வந்து மாற்றியமைப்பார்கள் எனக் காத்திருப்பதை விட்டுவிட்டு, பொதுமக்களாகிய நாமே முன்வந்து போராடுவதுதான் இன்றையத் தேவை எனக் கூறினார்.

“இப்போது விட்டால் பின் எப்போது போராடுவது?”என்றும் முருகேசன் தனது உரையில் கேள்வி எழுப்பினார்.

தமிழில் திருக்குறளை மேற்கோள் காட்டி முருகேசன் உரை

ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் கலந்து உரையாற்றிய முருகேசன் ஒரு கட்டத்தில் தமிழில் கீழ்க்காணும் திருக்குறளை மேற்கோள் காட்டி அதற்கான விளக்கத்தை மலாய் மொழியில் விளக்கினார்:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

இதன் பொருள் – இடித்துரைத்து அறிவுரை கூறும் பெரியவர்களைத் துணைக்கு வைத்துக் கொள்ளாத – அவர்களின் ஆலோசனையைக் கேட்காத மன்னன், பகைவர் இல்லாமலேயே கெட்டு விடுவான் – என்பதாகும்.

பழனிவேலுவுக்கு ஆதரவான கருத்துகள் 

முருகேசன் தனது உரையில், அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம், ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய அரசு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சங்கப் பதிவகமும் சீர்திருத்தப்பட வேண்டிய ஓர் அமைப்பு எனக் கூறினார்.

சட்டரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் அதிகாரங்களைப் பறிக்கும் வல்லமையை சங்கப் பதிவகம் கொண்டிருக்கின்றது என தனது உரையில் முருகேசன் சுட்டிக் காட்டினார்.

நேரடியாக அவர் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்  டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் பெயரை நேற்றைய மாநாட்டில் குறிப்பிடாவிட்டாலும், சொல்ல வருவது அண்மையில் மஇகாவுக்கும், சங்கப் பதிவகத்திற்கும் இடையில் நிகழ்ந்த சட்டப் போராட்டம் பற்றித்தான் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.

நஜிப் பதவி விலக வேண்டும் என வலுத்து வரும் மகாதீர்-சைட் இப்ராகிம் இணைந்துள்ள போராட்டத்தில் முருகேசனும் இணைந்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சில மறைமுக செய்திகளை தெரிவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

அதற்கேற்ப, மாநாட்டில் உரையாற்றும்போதும், பழனிவேல் தரப்பினர் சம்பந்தப்பட்ட சங்கப் பதிவகம் விவகாரம் குறித்தும் அவர் கேள்வியெழுப்பியிருப்பதும், சங்கப் பதிவகமும் சீர்திருத்தப்பட வேண்டிய ஓர் அமைப்பு என்று பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.