கோலாலம்பூர் – இந்து சமயம் பற்றியும், சீக்கியர்கள் பற்றியும் தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த பாடத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.
அப்பாடத் திட்டத்தில் தவறுகள் இருப்பதை பல்கலைக்கழக துணை வேந்தரும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அதனை மிக விரைவில் சரி செய்வோம் என உறுதியளித்திருப்பதாகவும் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
“உண்மையல்லாத குறிப்புகளால், சில தரப்பு மாணவர்கள் காயப்படுவதோடு, குழப்பிக் கொள்ளவும் வாய்ப்பிருப்பதால், இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காத படி பார்த்துக் கொள்ளள வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டே. என்னுடைய பரிந்துரையை அவர் முழுவதுமாக ஏற்றுக் கொண்டார்” என்று கமலநாதன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் அழுக்காகவே இருக்க விரும்புகின்றனர் என்றும், இஸ்லாம் அவர்களுக்கு வாழ்க்கை முறையைப் போதிக்கின்றது என்றும் தவறான தகவலுடன் யுடிஎம்-ன் சின்னம் கொண்ட அறிக்கை ஒன்று அண்மையில் இணையத்தில் பரவியதால் சர்ச்சை எழுந்தது.
மேலும், அதில் சீக்கிய மதம் என்பது இந்து மற்றும் இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதனை தோற்றுவித்தவர்கள் இஸ்லாம் மீது தான் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.