ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.57 நிலவரம்) அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை இன்று தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பினைக் கோட்டை விட்டது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற போட்டியில் இந்தோனிசியாவின் எல்.நட்சிர் – டி.அகமட் இணைக்கு, கடுமையான போட்டியை மலேசிய இணை வழங்கினாலும், இறுதியில் தோல்வியைத் தழுவியது.
முதல் செட் ஆட்டத்தில் 21-14 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவிய மலேசிய இணை, இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21- 12 புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து மலேசியாவுக்கு ஒலிம்பிக்சில் மற்றொரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மலேசியா இதுவரை முக்குளிப்பு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், சைக்கிள் ஓட்டப் போட்டியொன்றில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
பூப்பந்து போட்டிகளில் ஒலிம்பிக்ஸ் தங்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு இன்னும் கலைந்துவிடவில்லை.
நாளை ஆண்கள் இரட்டையர் ஆட்டத்திலும் இறுதி ஆட்டத்தில் மலேசியா மோதுகிறது.
இதற்கிடையில், ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் அரை இறுதி ஆட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் ஒற்றையருக்கான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின் பலம் பொருந்திய முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்’னை சந்திக்கின்றார்.