கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பழனிவேல் தரப்பு மஇகா கிளைகள் மீண்டும் கட்சியில் இணையும் நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ சோதிநாதன், விரைவில் பழனிவேல் தரப்பின் முக்கியத் தலைவர்களான ஜோகூர் மாநிலத்தின் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணனும், பினாங்கு மாநிலத்தின் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதமும் விரைவில் மஇகாவில் இணைவார்கள் என்ற அதிரடி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
“இன்றைய நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த பலரும் எங்கே, டான்ஸ்ரீ பாலாவும், டத்தோ ஹென்ரியும் வரவில்லையா எனக் கேட்டார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றேன். அவர்கள் இருவரும் விரைவில் மஇகாவில் வந்து இணைவார்கள். எங்களையெல்லாம் பின்னால் இருந்து பாலாவும், ஹென்ரியும் அனுப்பியிருக்கின்றார்கள். கூடிய விரைவில் அவர்களும் விரைவில் எங்களோடு வந்து இணைந்து கொள்வார்கள்” என்றும் சோதிநாதன் தனது உரையில் கூறினார்.
டான்ஸ்ரீ பாலா டத்தோ ஹென்ரி
இன்றைய கூட்டத்தில் டான்ஸ்ரீ பாலாவும், டத்தோ ஹென்ரியும் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அந்த இரு தலைவர்களும் மீண்டும் மஇகாவில் இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் பின்னணியில் நடைபெற்று வருவதாக மஇகா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், பழனிவேல் தரப்பில் தீவிரமாக இயங்கி வரும் மற்றொரு முக்கியத் தலைவரான ஏ.கே.இராமலிங்கம் குறித்தும் சோதிநாதன் சில விளக்கங்கள் தந்தார்.
“பலரும் கூறுவதுபோல் இராமலிங்கம் நாங்கள் கட்சிக்குத் திரும்புவதற்கு தடையாக இருக்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, அவர் நாங்கள் கட்சிக்குத் திரும்புவதற்கு ஆதரவு தந்தார். ஆனால், வாட்ஸ் எப் தளங்களில் அவரைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கின்றேன். முதலில் இந்த வாட்ஸ் எப் தளங்களை உங்கள் போன்களில் இருந்து எடுத்து விடுங்கள். அதனை எந்தவிதத்தில் நன்மை பயக்கும்படி பயன்படுத்துவது என்று பலருக்கு தெரியவில்லை.இந்த வாட்ஸ் எப்பை ஒழித்தால்தான் நாம் உருப்படுவோம்” எனக் கடுமையாகக் கூறினார்.
இன்றைய கூட்டம் சோதிநாதனுக்கு அரசியல் ரீதியாக ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.
காரணம், அவருடன் இணைந்திருக்கும் மஇகா கிளைகளின் எண்ணிக்கை 627 எனப் பகிரங்கமாக அறிவிப்பட்டிருக்கின்றது. அது ஒரு கணிசமான எண்ணிக்கை என்பதோடு மேலும் பல முக்கியத் தலைவர்கள் சோதிநாதனுடன் கைகோர்த்து மீண்டும் மஇகாவில் இணைந்துள்ளனர்.
ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எம்.எம்.சாமி, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் டத்தோ கணேசன், சிலாங்கூரின் கே.பி.சாமி, கூட்டரசுப் பிரதேசத்தின் பண்டார் துன் ரசாக் தொகுதியின் முன்னாள் தலைவர் ரவி, புத்ரா ஜெயா தொகுதியின் முன்னாள் தலைவர் கணபதி, பேராக் மாநிலத்தின் மோகன், கெடா மாநிலத்தின் எம்.எல்.மாறன், என இதுவரை பழனிவேல் தரப்பில் தீவிரமாக இயங்கி வந்த பல முக்கியத் தொகுதித் தலைவர்களும் சோதிநாதனுடன் இணைந்து கட்சிக்குத் திரும்பியிருப்பது மஇகா அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க திருப்பு முனையாகப் பார்க்கப்படுகின்றது.