Home Featured வணிகம் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது அஸ்ட்ரோ!

பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுகிறது அஸ்ட்ரோ!

878
0
SHARE
Ad

astroகோலாலம்பூர் – மலேசியாவின் ஒரே தனியார் துணைக்கோள தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோ பங்குச் சந்தையிலிருந்து அகற்றப்பட்டு, மீண்டும் தனியார் நிறுவனமாகச் செயல்படக் கூடும் என வணிக வட்டாரங்கள் ஆரூடங்கள் தெரிவித்துள்ளன.

தனது நிறுவனமான  உசாஹா தெகாஸ் சென்டிரியான் பெர்ஹாட் வழியாக அஸ்ட்ரோவில் ஏறத்தாழ 40 சதவீத பங்குடமையை ஆனந்தகிருஷ்ணன் கொண்டுள்ளார். அஸ்ட்ரோவில் அரசாங்கத்தின் சார்பில் கசானா நேஷனல் நிறுவனமும் கணிசமான பங்குடமையைக் கொண்டுள்ளது.

இதற்கு முன் ஆனந்தகிருஷ்ணன் தனது மேக்சிஸ் நிறுவனத்தையும் பங்குச் சந்தையிலிருந்து அகற்றி, தனியார் மயமாக்கி பின்னர் மீண்டும் பங்குச் சந்தையில் இடம் பெறச் செய்தார்.

#TamilSchoolmychoice

பங்குச் சந்தையிலிருந்து விலகுவது ஏன்?

Ananda-Krishnan-slider

ஒரு நிறுவனம் சில வணிக முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக பங்குச் சந்தையிலிருந்து விலகிக் கொள்வதும், அந்த முடிவுகளை எடுத்த பின்னர் மீண்டும் பங்குச் சந்தைக்குத் திரும்புவதும் வணிக வட்டாரங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.

அஸ்ட்ரோவின் உண்மையான மதிப்பை அதன் பங்குச் சந்தை விலை பிரதிபலிக்கவில்லை என்ற காரணத்தால் அதனை மீண்டும் தனியார் மயப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் முடிவெடுத்துள்ளதாக வணிகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 2012-இல் பொதுமக்களுக்கு தலா 3 ரிங்கிட் விலையில் அஸ்ட்ரோ பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து 3 ரிங்கிட்டை விடக் குறைந்த விலையிலேயே அஸ்ட்ரோ பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளன.

மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அஸ்ட்ரோ இன்று புதன்கிழமை ரிங்கிட் 2.71 என்ற விலையில் இறுதியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது.

அஸ்ட்ரோ எதிர்நோக்கும் வணிக சவால்கள்

வணிக ரீதியாகவும் அஸ்ட்ரோ கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றது. பல நிகழ்ச்சிகளை வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாங்க வேண்டிய அஸ்ட்ரோ, அதற்காக அமெரிக்க டாலரில் கட்டணம் செலுத்துகின்றது.

Astroஅமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு சரிந்து வருவதால், தனது நிகழ்ச்சிகளுக்காக கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலைமைக்கு அஸ்ட்ரோ ஆளாகியுள்ளது. இதன் காரணமாக, அதன் செலவினங்கள் அதிகரித்து வருகின்றன.

அதே வேளையில், நெட்பிலிக்ஸ், ஐபிலிக்ஸ் போன்ற அனைத்துலக  நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டிகளையும் அஸ்ட்ரோ எதிர்நோக்குகின்றது. இந்த நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திற்கு அனைத்துலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும், செல்பேசிகள், கையடக்கக் கருவிகள், இணையத் தொடர்புகள் மூலமாக வழங்கி வருகின்றன.

2003-இல் முதன் முதலில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அஸ்ட்ரோ பங்குகள் அப்போது ரிங்கிட் 3.65 விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஆனால் பின்னர் 2010-இல் ஆனந்த கிருஷ்ணன் மற்ற பங்குதாரர்களுடன் இணைந்து ரிங்கிட் 4.30 விலையில் மீண்டும் அஸ்ட்ரோ பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தை தனியார் மயமாக்கி, பங்குச் சந்தைப் பட்டியலிலிருந்து அகற்றினார்.

அதன் பின்னர், 2012-இல் மீண்டும் அஸ்ட்ரோவை பங்குச் சந்தையில் இடம் பெறச் செய்தார் ஆனந்தகிருஷ்ணன். ஆனால் இந்த முறை, அஸ்ட்ரோவின் வெளிநாட்டு சொத்துக்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் இணைக்கப்படவில்லை. 3 ரிங்கிட் விலையில் 2012-இல் பொதுமக்களுக்கு அஸ்ட்ரோ பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.

இந்த முறை மீண்டும் தனியார் மயமாக்கப்பட்டால், அஸ்ட்ரோ பங்குகளை எந்த விலையில் ஆனந்தகிருஷ்ணன் மீண்டும் வாங்கிக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் பங்குதாரர்களிடையே எழுந்துள்ளது.

-இரா.முத்தரசன்