Home Featured உலகம் உலகப் பார்வை: பிடல் காஸ்ட்ரோ – கென்னடிக்கே மிரட்டலாக விளங்கிய வரலாற்று நாயகன்!

உலகப் பார்வை: பிடல் காஸ்ட்ரோ – கென்னடிக்கே மிரட்டலாக விளங்கிய வரலாற்று நாயகன்!

1137
0
SHARE
Ad

FIDEL CASTRO

(பிடல் காஸ்ட்ரோவுக்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடிக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு மோதல் – அதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையில் மூன்றாவது உலகப் போரே வெடிக்கப் போகின்றது  என்னும் அளவுக்கு எழுந்த அச்சம் – இவற்றின் பின்னணியில் வெள்ளிக்கிழமை மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் அரசியல் பயணத்தில் சில வரலாற்று சம்பவங்களை தனது பார்வையில் வழங்குகின்றார் செல்லியல் ஆசிரியர் இரா.முத்தரசன்)

1962-ஆம் ஆண்டு!

#TamilSchoolmychoice

அமெரிக்க அதிபராக 1960-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜான் எஃப் கென்னடி பதவி வகித்த காலகட்டம். ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே பெரும் மிரட்டலாக விளங்கியது, அதன் தென் முனையில் இருந்த கியூபா என்ற சிறிய தீவு.

அந்த ஆண்டில் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையிலான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு மோதல்தான், மூன்றாம் உலகப் போரே மூண்டுவிடப் போகின்றது என உலக நாடுகளே அஞ்சும் அளவுக்கு மோசமான நிலைமைக்குக் கொண்டு சென்றது.

1902 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது கியூபா.  அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு இணக்கமான போக்கையே கொண்டிருந்தனர். ஏறத்தாழ அமெரிக்காவின் இன்னொரு காலனித்துவ நாடாக மாறிவிட்டிருந்தது கியூபா.

fidel-castro-che-quara

சே குவாராவுடன், பிடல் காஸ்ட்ரோ…

கொரில்லா போர்முறை மூலம், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாட்டிஸ்டா-வின் ஆட்சியைக் கவிழ்த்து கியூபாவை காஸ்ட்ரோ 1959-ஆம் ஆண்டில் கைப்பற்றியபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தது சுமார் 800 பேர் மட்டுமே கொண்ட போராளிகள் படை – ஆனால் மன உறுதி கொண்ட அச்சமன்றிப் போராடிய வீரர்கள்.

அவர்களில் அர்ஜெண்டினாவின் சே குவாராவும், இன்றைக்கு கியூபாவின் அதிபராக இருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ராவுல் காஸ்ட்ரோவும் அடங்குவர்.

ரஷியா பக்கம் சாய்ந்த காஸ்ட்ரோ

1959-ஆம் ஆண்டுக்குப் பின்னர் கியூபாவை ஆட்சி செய்து வந்த காஸ்ட்ரோ,  ரஷியா பக்கம் சாய்ந்ததோடு, ரஷிய பாணியிலான கம்யூனிச ஆட்சி முறையை தனது நாட்டில் அமுல்படுத்தியிருந்தார்.

உலகுக்கே ஜனநாயகப் பெருமையைப் பறைசாற்றி பல உலக நாடுகளை ஜனநாயகத்துக்கு மாற்றி வந்த அமெரிக்காவுக்கோ தனக்கு மிக அருகில் இருக்கும் கியூபாவில் மாற்றம் கொண்டுவர முடியவில்லையே என்ற ஆதங்கமும், தனது மண்ணிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவிலேயே இருந்த ஒரு நாட்டில் கம்யூனிச ஆட்சியா என்ற எரிச்சலும் மிக அதிகமாகவே இருந்தது.

kennedy-khurushev

ரஷிய அதிபர் குருஷேவ் – அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி….

இந்த சமயத்தில்தான், 1961-ஆம் ஆண்டில் ‘பே ஆஃப் பிக்ஸ்’ (Bay of Pigs invasion) என்ற பெயரில் கியூபா மீது போர் தொடுத்து, காஸ்ட்ரோவின் ஆட்சியை அகற்ற, சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் உதவியோடு அமெரிக்கா செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில்தான் 1962-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ரஷியாவின் அதிபர் குருஷேவ், காஸ்ட்ரோவுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அமெரிக்காவின் அபாயத்தை கியூபா எதிர்கொள்ள உதவும் பொருட்டு அணுசக்தி ஆயுதங்களை கியூபாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அது.

அதன்படி, கியூபாவின் சில இடங்களில் ரஷியா அணு ஆயுத ஏவுகணைகளை ஏவுவதற்கான இராணுவத் தளங்களை அமைக்கின்றது என்ற தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனங்கள் பெற்று அமெரிக்க அதிபரிடம் வழங்கினர்.

john-f-kennedyசெப்டம்பர் 1962-இல் கென்னடி (படம்), ரஷியா, கியூபாவில் அணு ஆயுத இராணுவத் தளங்களை நிர்மாணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அணு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்றும் பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.

ஆனால், ரஷியாவின் அதிபர் நிக்கிதா குருஷேவ் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ரஷிய அணு ஆயுதங்களுடன் கியூபா நோக்கி சென்ற கப்பல்

1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கியூபாவுக்கான அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு, ரஷியாவிலிருந்து சில கப்பல்கள் புறப்பட்டன.

இருப்பினும், அமெரிக்காவின் புலனாய்வுத் துறை இந்த விஷயத்தை மோப்பம் பிடித்து விட்டது. உடனடியாக அதிபர் ஜான் கென்னடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது என்று உயர் மட்ட இராணுவ, மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் கலந்லோசித்தார் கென்னடி.

இன்றுவரை கென்னடியின் வரலாற்றை ஆராய்பவர்கள், இந்த சம்பவம்தான் கென்னடியின் அதிபர் வாழ்க்கையில் மிக நெருக்கடியான சம்பவம் என்று வர்ணிக்கின்றார்கள்.

பின்னாளில் கியூபன் மிசைல் கிரைசிஸ் (The Cuban Missile Crisis) என வரலாற்று ஆசிரியர்களால் இந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

cuban-missile-crisis-launch-sitejpg

கியூபா நாட்டில் அமைக்கப்படும் இராணுவத் தளங்களை அடையாளம் காட்டிய அமெரிக்க உளவுத் துறை படம் ஒன்று….

சோவியத் ரஷியாவின் அணு ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு கியூபா நோக்கி கப்பல் ஒன்று வருகிறது என்ற நிலையில், பகிரங்கமான அறிவிப்பு ஒன்றை அக்டோபர் 22-ஆம் தேதி தொலைக்காட்சியின் அறிவித்தார் கென்னடி. கியூபாவைச் சுற்றி அமெரிக்க கடற்படை பாதுகாப்பு பரிசோதனை வளையம் அமைக்கும் என்ற அறிவிப்புதான் அது.

அதே நாளில் குருஷேவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார் கென்னடி. கியூபாவில் இராணுவத் தளங்களை ரஷியா உடனே அகற்ற வேண்டும், அத்துடன் கியூபா நோக்கி அணு ஆயுதங்களுடன் வந்து கொண்டிருக்கும் ரஷியக் கப்பல்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என அந்தக் கடிதத்தில் கென்னடி வலியுறுத்தியிருந்தார். அதன் பின்னர் பல கடிதங்கள் இந்த இரு தலைவர்களுக்கும் இடையில், இந்த சம்பவங்கள் தொடர்பில் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

ஒரு சினிமாப் படத்தின் இறுதிக் காட்சிபோல் அந்த காலகட்ட உலக அரசியல் பரபரப்பாக மாறத் தொடங்கியது.fidel-castro-17-yrs-playing-basket-ball

கூடைப்பந்துப் போட்டியில் ஆர்வம் காட்டிய 17-வயது பிடல் காஸ்ட்ரோ…

அமெரிக்க கடற்படைகள், கியூபாவுக்கான கடல் பாதையில் ஓர் எல்லைக் கோடு வரைந்து, அணு ஆயுதங்களோடு வரும் ரஷியக் கப்பல்கள் இந்த எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றால், நாங்கள் தடுத்து அந்த அணு ஆயுதங்களைப் பறிமுதல் செய்வோம் என எச்சரித்தது.

கியூபா மற்றும் ரஷியக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு தயார் நிலையில் இருக்கிறோம் என அமெரிக்க இராணுவமும் அறிவித்தது.

ரஷியா மீது போர் தொடுப்போம் என கென்னடி விடுத்த எச்சரிக்கை

தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில், “கியூபாவிலிருந்து எந்த நாட்டை நோக்கி ஏவுகணை பாய்ந்தாலும் அது அமெரிக்காவுக்கு எதிரான போர் என அமெரிக்கா கருதும். அதற்கு பதிலடியாக ரஷியா மீது பதில் தாக்குதல் நடத்தும்” என பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்தார் கென்னடி.

fidel-castroசிறந்த அரசியல் முடிவுகளை எடுத்த அமெரிக்காவின் தலைசிறந்த அதிபர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் பட்டியலிடும்போது அதில் கென்னடியும் இடம் பெறுவது இதுபோன்ற அவரது தீர்க்கமான முடிவுகளால்தான்!

அக்டோபர் 24-ஆம் பதில் அறிக்கை விடுத்த குருஷேவ், அமெரிக்காவின் செயல் அதன் ஆக்கிரமிப்புத் தன்மையைக் காட்டுகின்றது என்று சாடியதோடு, கியூபா செல்லும் சோவியத் ரஷியாவின் கப்பல்கள் திரும்பாது, தொடர்ந்து செல்லும் என அதிரடியாக அறிவித்தார்.

அடுத்து என்ன நடக்கப் போகின்றது என உலகமே ஆவலுடன் இந்த நிலவரத்தைப் பார்க்கத் தொடங்கியது.

ஆனால், அக்டோபர் 24, 25-ஆம் தேதிகளில் ரஷியக் கப்பல்கள் அமெரிக்கா வகுத்த கடல் எல்லையை அடைவதற்கு முன்பே ரஷியா நோக்கித் திரும்பத் தொடங்கின.

ஆனால், அந்தக் கப்பல்கள் தொடர்ந்து சென்றிருந்தால், அமெரிக்க இராணுவமும் அவற்றைத் தடுத்திருந்தால், அதன்மூலம் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் போர் மூண்டு, அது மூன்றாவது உலகப் போராக வெடித்திருக்கும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பு. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நடந்த உலக சம்பவங்களில், மூன்றாம் உலகப் போரை மிக நெருக்கத்தில் கொண்டுவந்த சம்பவங்களுள் முதன்மைச் சம்பவமாக இதைத்தான் இன்றுவரை கூறுகிறார்கள்.

ஆனால், இந்த சம்பவங்களுக்கெல்லாம் பின்னணியில் இருந்தது கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோதான்!

காலம் மாறியது – போப்பாண்டவர், அமெரிக்க அதிபர் கியூபாவுக்கு வருகை

பின்னர் ரஷியாவும் தனது இராணுவத் தளங்களை கியூபாவில் இருந்து அகற்றியது. இருப்பினும் ரஷியாவுக்கும், கியூபாவுக்கும் இடையிலான வணிக, தூதரக, இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்ந்தன.

Pope Francis-Fidel Castro-meet 20 sept 2015

கியூபாவுக்கு வருகை மேற்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காஸ்ட்ரோவைச் சந்தித்தபோது….

இருப்பினும், காஸ்ட்ரோவை பதவியில் இருந்து அகற்ற பல்வேறு இரகசிய முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வந்தது சிஐஏ. காஸ்ட்ரோவைக் கொன்று அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டது.

இதுவரை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு சுமார் 600க்கும் மேற்பட்ட முறை சிஐஏ முயற்சி செய்தது என்கிறார்கள் சிலர். காஸ்ட்ரோ புகைக்கும் சுருட்டுகளில் விஷத்தைத் தடவுவது, அவரது தாடியில் விஷத்தைத் தடவுவது போன்ற புதுமையான முறைகளும் ஆலோசிக்கப்பட்டன என ஆணித்தரமாக விவாதிக்கின்றார்கள். இதுகுறித்த சில தகவல்கள் அமெரிக்க செனட் விசாரணையிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

usa-cia-fidel-castro

காஸ்ட்ரோவைக் கொல்லும் முயற்சிகள் தொடர்பில் பிப்ரவரி 2016-இல் நடைபெற்ற அமெரிக்க செனட் விசாரணையின்போது அமெரிக்க இராணுவ, புலனாய்வுத் துறை உயர்மட்டத் தலைவர்கள்….

ஆனால், 1976-ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராக நீடித்த காஸ்ட்ரோ, அதன் பின்னர் ஆட்சி நடைமுறைச் சட்டங்களை மாற்றி அதிபராக மாறினார். பக்கபலமாக தனது தம்பி ராவுல் காஸ்ட்ரோவை துணை அதிபராக்கிக் கொண்டார்.

2011-ஆம் ஆண்டு வரை அதிபராக நீடித்த காஸ்ட்ரோ முதுமை, மோசமான உடல் நிலை காரணமாக தனது தம்பிக்கு பதவியை விட்டுக் கொடுத்து விட்டு பொதுமக்கள் பார்வையிலிருந்தும், அரசாங்க அலுவல்களிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டார்.

Obama-Cuba-visit-rain

கொட்டும் மழையில், நீர் தேங்கிய கியூபா தலைநகர் ஹவானாவின் தெருக்களில் ஒபாமா தனது கியூபா வருகையின்போது குடும்பத்தினருடன் நடந்து சென்றபோது….

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் சுமுகமான நட்புறவு என்றாவது மலருமா என 1970-ஆம் ஆண்டுகளில் காஸ்ட்ரோவிடம் கேட்கப்பட்டபோது, “மலரும்! அமெரிக்கா  கியூபாவிடம் நட்புறவு கொள்ளும். கறுப்பர் ஒருவர் அமெரிக்க அதிபராகும்போது, லத்தின் அமெரிக்கர் ஒருவர் போப்பாண்டவர் ஆகும்போது அது நடக்கும்” என அவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அதிசயமாக, அந்த கணிப்பு உண்மையாக மாறியது.

2008-ஆம் ஆண்டில் ஒபாமா அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த – கியூபா நாட்டைப் போன்றே ஸ்பானிஷ் மொழி பேசும் – போப் பிரான்சிஸ் போப்பாண்டவராக 2013-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இந்த சூழ்நிலை உருவாகியபோது இன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது. அமெரிக்காவும் கியூபாவும் நட்புறவு கொள்ளும் என்ற கணிப்பைக் கூறிய காஸ்ட்ரோவும் அந்த காலகட்டத்தில் பதவியில் இல்லை.

AMERICAS SUMMIT HELD IN PANAMA CITY

இன்றைய கியூபா அதிபரும், காஸ்ட்ரோவின் தம்பியுமான ராவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா சந்திப்பு நடத்தியபோது…

அதே போப்பாண்டவர் 2015-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது, கியூபாவுக்கும் வருகை தந்தார். பிடல் காஸ்ட்ரோவையும் போப்பாண்டவர் சந்தித்தார்.

கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நட்புறவு ஏற்படுத்த பின்னணியில் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தது போப்பாண்டவர்தான் என பலமுறை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலக அதிசயமாக முதன் முறையாக எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் (ஒபாமா) ஒருவர் கியூபாவுக்கு அதிகாரத்துவ வருகை ஒன்றை இந்த ஆண்டில் மேற்கொண்டார். ஆனால், நோய்வாய்ப்பட்டிருந்த – அமெரிக்காவுடன் நீண்ட கால பகைமை பாராட்டிய – காஸ்ட்ரோவை ஒபாமா சந்திக்கவில்லை.

இவ்வாறு பல்வேறு உலக வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் இருந்த காஸ்ட்ரோவும் இப்போது மறைந்துவிட்டார்.

காலம் சுழல்கின்றது!

யார் கண்டது?

மூன்றாவது உலகப் போரையே உண்டாக்கும் அளவுக்கு மோதிக் கொண்ட கியூபாவும் அமெரிக்காவும் இனிவரும் ஆண்டுகளில் , ஒட்டி உறவாடும் நட்புறவு நாடுகளாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-இரா.முத்தரசன்