Home Featured நாடு இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன்? சீனப் பள்ளிகளில் அமுலாக்கம் இல்லை!

இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன்? சீனப் பள்ளிகளில் அமுலாக்கம் இல்லை!

952
0
SHARE
Ad

tamil-school-students

கோலாலம்பூர் – மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளும், சீனப் பள்ளிகளும் தாய்மொழிக் கல்வியைக் கற்பிக்கும் ஆரம்பப் பள்ளிகள் தேவை என்ற அடிப்படையில்தான் நிறுவப்பட்டன. இன்று அரசு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தாய்மொழிக் கல்வி குறித்த எத்தகைய முடிவுகள் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அவை தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு ஒருங்கே பொருந்தும் வண்ணம்தான் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றன.

ஆனால், அடுத்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இருமொழித் திட்டம் சீனப்பள்ளிகளில் அறிமுகம் காணாமல், தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமே அறிமுகம் காண்கின்றது என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அறிமுகப்படுத்தக்கூடாது எனப் போராட்டம் நடத்தி வரும் வடமலேசிய அரசு சாரா இயக்கங்கள் கடந்த 23 டிசம்பர் 2016ஆம் தேதி நடத்திய கண்டனக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஏன் இருமொழித் திட்டக் கொள்கையை எதிர்க்கின்றோம் என அந்த இயக்கங்களின் சார்பாக சில விளக்கங்கள் தரப்பட்டுள்ளது.

அதன்படி 2017-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் இருமொழித் திட்டத்தில் இணைவதற்கு மொத்தம் 49 தமிழ்ப் பள்ளிகள் நாடளாவிய அளவில்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தேசியப் பள்ளிகள் என்று வரும்போது மொத்தம் 572 பள்ளிகள் இருமொழித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், சீனப்பள்ளிகள் என்று வரும்போது ஒரே ஒரு சீன ஆரம்பப் பள்ளி மட்டுமே இருமொழித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சீனப்பள்ளிகள் இந்த இருமொழித் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்ததன் காரணமாக இந்த திட்டம் சீனப்பள்ளிகளில் தவிர்க்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிகின்றது.

இருப்பினும், நாட்டில் இயங்கிவரும் 60-க்கும் மேற்பட்ட தனியார் சீன இடைநிலைப் பள்ளிகள் இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம், இருமொழித் திட்டம் அடிப்படையில் சில பாடங்கள் – குறிப்பாக தொழில் நுட்பப் பாடங்கள் – ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதற்கு சரியான களம் இடைநிலைப் பள்ளிகளே என்பது இந்த சீன இடைநிலைப் பள்ளிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இடைநிலைப் பள்ளிகளில் தொழில் நுட்பம் தொடர்பான பாடங்களை ஆங்கிலத்தில் படிக்கும் மாணவர்கள் பின்னர் பல்கலைக் கழகங்களில் உயர் கல்வியை – பட்டப் படிப்புகளைத் தொடரும்போது – அவர்களுக்கு அது உதவியாக இருக்கும் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது.

எந்த அடிப்படையில் 49 தமிழ்ப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

இதற்கிடையே 49 தமிழ்ப் பள்ளிகள் எந்த அடிப்படையில் இருமொழித் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.  நாட்டின் பல இடங்களில் அமைந்துள்ள இந்தப் பள்ளிகள் சிறந்த தமிழ்ப் பள்ளிகள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனவா என்றால் அப்படியும் இல்லை என்கின்றார்கள் இருமொழித் திட்டத்தின் எதிர்ப்பாளர்கள்.

காரணம், நாட்டின் சிறந்த தமிழ்ப் பள்ளிகள் என மாணவர்களின் தேர்ச்சி விகாதாச்சார அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள சிறந்த 30 பள்ளிகளில் பல பள்ளிகள் இந்தப் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளன.

தாய்மொழிக் கல்வி என்ற அடிப்படையில் நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், தாய்மொழிக் கல்வியைப் பாதிக்கும் ‘இருமொழித் திட்டம்’ போன்ற முக்கியமான ஒரு திட்டம் ஏன் தமிழ்ப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றது – ஏன் சீனப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது புரியாத ஒரு புதிராக இருக்கின்றது என இருமொழித் திட்ட எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்ற வாதம் நியாயமான ஒன்றாகவே படுகின்றது.

-இரா.முத்தரசன்