புத்ரா ஜெயா – மஇகாவும், சங்கப் பதிவகமும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சங்கப் பதிவகத்தின் முடிவுகளைப் பெற்றதாக, முன்னாள் பத்து தொகுதித் தலைவர் கே.இராமலிங்கமும் மேலும் எழுவரும் தொடுத்திருந்த வழக்கை கடந்த 11 ஜூலை 2016-இல் விசாரித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் தரப்பினர் தொடுத்திருந்த மேல்முறையீடு இன்று செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீட்டை விசாரித்த மூன்று நீதிபதிகள் ஏகமனதாக, இந்த வழக்கு மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில், மற்றொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டுமெனத் தீர்ப்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிற்கான புதிய தேதியை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்கின் பின்புலம்
கடந்த 5 பிப்ரவரி 2016-ஆம் நாள் கே.இராமலிங்கமும் மேலும் 7 வாதிகளும் இணைந்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், டத்தோ எஸ்.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், டத்தோ ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ரசின் அப்துல்லா மற்றும் சங்கப் பதிவக அதிகாரி அக்மல் யாஹ்யா ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டனர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை மற்றும் டத்தோ எம்.வி.இராஜூ ஆகியோர் வாதிகளாகச் செயல்பட்டனர்.
இந்த வழக்கின் பிரதிவாதிகள் கூட்டுச் சதியாலோசனையின் மூலம் 2013 கட்சித் தேர்தல் தொடர்பான முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பெற்றனர் என்பதும், அதன் மூலம் கட்சித் தலைமையைக் கைப்பற்றினர் என்பதும் இந்த வழக்கின் சாராம்சமாகும்.
வழக்கின் முழு விசாரணை நடைபெறுவதற்கு முன்பாக, டாக்டர் சுப்ரமணியம் மற்றும் மற்ற பிரதிவாதிகள், உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றைச் சமர்ப்பித்து, “ஏற்கனவே, விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்ட விவகாரம் இது என்பதால், நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டிக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்ட வேண்டும். ” என்று வாதிட்டனர்.
இந்த இடைக்கால மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இயோ வீ சியாம், பிரதிவாதிகளில் வாதங்களை ஏற்றுக் கொண்டு, வழக்கை விசாரிக்கமலேயே, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில் அந்த வழக்கை கடந்த 11 ஜூலை 2016-இல் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்திருந்தனர்.
அந்த மேல்முறையீடு மீதான விசாரணைதான் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவரும், இந்த வழக்கில் சில கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதால், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில் வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முழு விசாரணையாக, மற்றொரு நீதிபதியின் முன்னிலையில் நடைபெறும்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு நடத்தப்பட்டு முழு விசாரணைகள் முடிவடைவதற்கும், இறுதித் தீர்ப்பு வருவதற்கும் மேலும் பல மாதங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்