ஆராவ் – பெர்லிஸ் மலேசியப் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாம் குறித்துப் பேசிய விளக்கத்தைக் கேட்டு, இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அவர் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவினார்.
ஆர்.ஏ.சிவலீலா (வயது 40) என்ற அம்மாணவி இஸ்லாம் குறித்து புத்தகங்களை வாசித்தும், யூடியூப்பில் காணொளிகளைப் பார்த்தும் ஆய்வு செய்து வந்ததாகவும், டாக்டர் ஜாகிர் நாயக்கின் விளக்கத்தை தான் மிகவும் ரசித்ததோடு, அவரது விளக்கத்தால் தான் அல்லாவின் இருப்பு குறித்து மிகவும் திருப்தியடைந்ததாகவும் சிவலீலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாம் சமூகத்தினரிடையே ஒற்றுமையின்மை நிலவி வருவதைத் தடுக்கும் வகையில், “குரானும், நவீன அறிவியலும் – மோதலும் சமரசமும்” என்ற தலைப்பில் ஜாகிர் பேசினார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஜாகிர், “நான் மீண்டும் ஒருமுறை அழுத்தமாகக் கூறுகின்றேன். நான் இங்கு பொய்களைப் பரப்பவோ அல்லது மற்ற மதங்களை அவமதிக்கவோ வரவில்லை. ஆனால் அடிப்படையாக ஒற்றுமையை வளர்க்கவே வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தகவல்: பெர்னாமா