கோலாலம்பூர் – ஏதாவது ஒரு விவகாரத்தில் ஒட்டுமொத்த மலேசியாவும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கும் போது, திடீரெனத் தனது பரிவாளங்களுடன் களத்தில் இறங்கி சிறப்புச் சடங்குகள் என்ற பெயரில் அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைப்பவர் தான் ராஜா போமோ இப்ராகிம் மாட் சின்.
இந்நிலையில், ‘தி சண்டே டைம்ஸ்’ என்ற செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளாக மலேசியாவை தான் பாதுகாத்து வருவதாகவும், சுதந்திரத்திற்கு முன்பே அதனை தான் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
“எனக்கு காசு எதுவும் வேண்டாம். நான் மலேசியாவிற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தவே சடங்குகள் செய்து வருகிறேன். நமக்கு (வட)கொரியாவைப் போல் அதிநவீன ஆயுதங்கள் எல்லாம் தேவையில்லை. போருக்கு நாம் ஆயுதங்களுடன் சென்றால் தோற்றுவிடுவோம். ஆனால் நாம் பழமைவாய்ந்த நம்முடைய முறைகளின் படி, நிலம், நீர், காற்று இம்மூன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், அவர்கள் (வடகொரியா) அனுப்பும் ஏவுகணைகள் எல்லாம் மாயமாகிவிடும், அவை மலேசியாவை வந்தடையாது” என்று ராஜா போமோ கூறியிருக்கிறார்.