Home Featured நாடு ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசியிடம் சிக்கிய முக்கியப் புள்ளி யார்?

ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசியிடம் சிக்கிய முக்கியப் புள்ளி யார்?

804
0
SHARE
Ad

sultan-johor1கோலாலம்பூர் – “டான்ஸ்ரீ” பட்டம் வழங்கினால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாக ஜோகூர் சுல்தானிடம் கூறியவரின் அடையாளம் தெரிந்துவிட்டதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியிருக்கிறது.

இது தொடர்பாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்ததையடுத்து, அவரிடமிருந்து அந்நபரைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்டதாக எம்ஏசிசி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் எம்ஏசிசி வெளிப்படையான விசாரணை நடத்தும் என்றும், சம்பந்தப்பட்ட நபரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜோகூர் சுல்தானிடம் உறுதியளித்திருப்பதாகவும் எம்ஏசிசி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜோகூர் சுல்தானை எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோ சுல்கிப்ளியும், சில மூத்த அதிகாரிகளும் நேரில் சந்தித்து, சுமார் 1 மணி நேரம் பேசினர். அப்போது தனக்கு லஞ்சம் கொடுப்பதாகக் கூறியவர் யார் என்பதை ஜோகூர் சுல்தான் எம்ஏசிசி அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை, ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவலில், கோலாலம்பூரைச் சேர்ந்த நபர், அரசாங்கத் தலைமைச் செயலகத்திடம் பரிந்துரைத்து ‘டான்ஸ்ரீ’ பட்டம் வழங்கும் பட்டியலில் தன்னை சேர்த்தால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாகக் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எம்ஏசிசி தன்னைச் சந்தித்தால், அந்நபரைப் பற்றிய விவரங்களைத் தான் வெளியிடுவதாகவும் ஜோகூர் சுல்தான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.