புத்ரா ஜெயா – அண்மையக் காலங்களில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் பெர்ஹாட் என்ற நிறுவனம். பெல்டாவின் துணை நிறுவனமான இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றது. உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனங்களில் ஒன்றாகவும், செம்பனை நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாகவும் கருதப்படுகின்றது பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ்.
பெல்டாவின் தலைவராக இருப்பவர் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட்.
பெல்டா 34 சதவீத பங்குகளை பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தில் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக மறைமுகமாக அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராக நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில், பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்காரியா அர்ஷாட் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கும் நிலையில் இந்நிறுவனம் குறித்து விசாரிக்கத் தயாராக இருப்பாதக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் அறிவித்திருக்கின்றது.
இந்த சூழலில்தான் நேற்று மத்திய அரசாங்கம் பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் குறித்து கண்காணிக்கவும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராயவும், முன்னாள் அமைச்சரும், பொருளாதார நிபுணருமான இட்ரிஸ் ஜாலாவை (படம்) நியமித்திருக்கின்றது.