Home நாடு பழம்பெரும் பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் காலமானார்

பழம்பெரும் பத்திரிக்கையாளர் எம்.துரைராஜ் காலமானார்

2411
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எம்.துரைராஜ் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் தகவல் இலாகாவில் பணியாற்றிய காலத்தில் “உதயம்” என்ற மாத இதழை அழகான வடிவமைப்போடும், சிறந்த முறையில் அச்சடித்தும் வெறும் 30 காசுகள் விலையில் கொண்டு வந்து சாதனை படைத்தவர் துரைராஜ். ‘உதயம்’ பத்திரிக்கையின் மூலம் எண்ணற்ற உள்நாட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் அவர். அதன் காரணமாகவே, பல்லாண்டுகளாக உதயம் துரைராஜ் என்றே அழைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ‘இதயம்’ என்ற மாத இதழை சில ஆண்டுகள் நடத்தினார். பல எழுத்தாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் ஆசானாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் துரைராஜ்.

#TamilSchoolmychoice

சிறந்த மேடைப் பேச்சாளருமான துரைராஜ் பல ஆண்டுகள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வழிநடத்தியவர். முன்னாள் மஇகா தேசியத் தலைவர் அமரர் மாணிக்கவாசகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் வாயிலாக எழுத்தாளர்களுக்கான அறவாரிய நிதி ஒன்றையும் தோற்றுவித்தவர் துரைராஜ்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவுடன் இளம் பருவத்தில் நெருங்கிய நண்பராகவும் உலா வந்தவர் துரைராஜ்.

இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற துரைராஜ் அவர்களின் மறைவுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கும் சக பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும் முகவரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அவரது மகள் சொர்ணகுமாரி துரைராஜ் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்:

No: 25 Jalan Udang Gantung Satu,

Taman Cuepacs Segambut

52000 Kuala Lumpur