Home நாடு “அடையாள ஆவண சிக்கல் – பதிவு அலுவலகத் தடைகள் களையப்படும்” – வேதமூர்த்தி

“அடையாள ஆவண சிக்கல் – பதிவு அலுவலகத் தடைகள் களையப்படும்” – வேதமூர்த்தி

638
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடையாள ஆவண சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் தொடர்பில் தேசிய பதிவு அலுவலகத்தில் நிலவும் ஒருசில நடைமுறைத் தடைகள் களையப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இந்திய சமுதாயத்தில் அடையாள ஆவண பிரச்சனையை எதிர்நோக்குபவர்களின் இன்னல் களையப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்ததும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வை எட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, தேசிய பதிவு அலுவலகங்களில் பலவித தடைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டன. அத்துடன், இந்தச் சிக்கலை எதிர்நோக்கி இருப்பவர்களும் வகைப்படுத்தப்பட்டனர்.

#TamilSchoolmychoice

குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாமல் விட்டவர்கள், வெளிநாட்டுப் பெண்களை மணம் முடித்தவர்கள், திருமணத்தைப் பதிவு செய்யாத தம்பதியரின் பிள்ளைகள், மணமுறிவுக்குப் பின் பதிவுத் திருமணம் செய்யாமல் மறுமணம் புரிந்தவர்களின் பிள்ளைகள் என்றெல்லாம் பல சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டன. இவ்வாறு பத்து பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசிய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் இந்த மண்ணில் முறையாகப் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் குடியுரிமையைப் பெற உரிமை இருக்கிறது. அதேவேளை, இதன் தொடர்பில் தேசிய அலுவலகத்தில் நிலவும் ஒருசில தடைகளை முதலில் களைய வேண்டி இருக்கிறது.

இதற்கான பணிகள் சீராக நடைபெற்று வரும் நிலையில், கூடிய விரைவில் இது குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடும். அமைச்சரவையின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் பிறகு இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.