Home நாடு மாமன்னர் நீடூழி வாழ்க!

மாமன்னர் நீடூழி வாழ்க!

1016
0
SHARE
Ad

கோலாலம்பூர் – உலக நாடுகளில் எங்குமே காணப்படாத – பின்பற்றப்படாத – புதுமையான ஒரு நடைமுறையை “மக்களாட்சியோடு இணைந்த மன்னராட்சி” என்ற ஆட்சி முறையாக உருவாக்கி அதனை வெற்றிகரமாக கடந்த 60 ஆண்டுகளாக செயல்படுத்தியும் வரும் நாடு மலேசியா.

அந்த நடைமுறையின் அடிப்படையில் இன்று 16-வது மாமன்னராக அதிகாரபூர்வமாக அரியணையில் அமர்கின்றார் பகாங் மாநிலத்தின் ஆட்சியாளரான அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா.

மலாய் இன பாரம்பரியத்தின் பீடமாகவும், தொடர்ச்சியாகவும் பார்க்கப்படும் மன்னராட்சியின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அந்த மலாய் ஆட்சியாளர் மலாய் இனத்துக்கே உரிய சுல்தானாக, ஆட்சியாளராக, மாமன்னராக மட்டும் பார்க்கப்படாமல் அனைத்து இன மக்களின் ஆட்சியாளராகவும், நலன் காப்பவராகவும் பார்க்கப்படுவதுதான்.

#TamilSchoolmychoice

நாட்டின் மற்ற இன கலை, பண்பாட்டு, மத நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதையும், அனைத்து இனங்களோடு இணக்கமாக உறவாடுவதையும் தங்களின் அடையாளமாகக் கொண்டு அனைத்து மலாய் ஆட்சியாளர்களும் செயல்பட்டு வந்திருக்கின்றனர் என்பது மலேசியாவுக்கே உரிய இன்னொரு சிறப்பு அம்சம்.

குறிப்பாக இந்து ஆலயங்களுக்கே சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பல சுல்தான்கள் தங்களின் வழக்கமான பணிகளில் ஒன்றாக வைத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஓர் அம்சம்.

இன்று அரியணையில் அமரும் புதிய மாமன்னரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, நாடு முழுக்க பரவியிருக்கும் கொண்டாட்டத்தில் செல்லியல் குழுமமும் பங்கு கொள்கிறது.