Home One Line P1 முகமட் இசா: பெல்டாவிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வெளியானது!- சாட்சி

முகமட் இசா: பெல்டாவிலிருந்து 100 மில்லியன் ரிங்கிட் வெளியானது!- சாட்சி

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம், பெல்டாவிலிருந்து அதன் துணை நிறுவனமான பெல்டா முதலீட்டுக் கழகம் செண்டெரியான் பெர்ஹாட்டுக்கு (எப்ஐசிஎஸ்பி) 100 மில்லியன் ரிங்கிட்டை மாற்றுவதற்கான பரிவர்த்தனை நடந்ததாக இங்குள்ள ஜாலான் ராஜா மூடா மேபேங்க் கிளை உதவி மேலாளர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

46 வயதான குர்சியா முகமட் தாயிப், முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் மீதான நம்பிக்கை மீறல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணையின் மூன்றாம் நாளில் தனது சாட்சி அறிக்கையை வாசித்தபோது இவ்வாறு கூறினார்.

ஆறாவது அரசு தரப்பு சாட்சியான அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி எப்ஐசிஎஸ்பியிலிருந்து 97,993,061.23 ரிங்கிட் திரும்பப் பெறும் பரிவர்த்தனை நடந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“2015-ஆம் ஆண்டு மே 28-இல், எப்ஐசிஎஸ்பி அதன் மேபேங்க் நடப்புக் கணக்கிலிருந்து 97,993,061.23 ரிங்கிட்டை, கெகாசான் அபாடி பிராபர்டீஸ் செண்டெரியாங் பெர்ஹாட்டுக்கு (ஜிஏபி) சொந்தமான மேபேங்க் கணக்கிற்கு மாற்ற விண்ணப்பித்ததை நான் உறுதி செய்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஐந்தாவது சாட்சியான, முன்னாள் பெல்டா இயக்குனர் டத்தோ ஹானாபி சுஹாடா கூறுகையில், மெர்டேகா பேலஸ் ஆடம்பர தங்கும் விடுதியை (எம்பிஎச்எஸ்) வாங்குவதற்கு, ஜிஏபி, எப்ஐசிஎஸ்பிக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை விரைவாக செலுத்துமாறு முகமட் இசா உத்தரவிட்டதாக கூறினார்.

2015-இல் எப்ஐசிஎஸ்பி 160 மில்லியன் ரிங்கிட்டுக்கு எம்பிஎச்எஸை வாங்கியது.

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, முகமட் இசா நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி மற்றும் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு இடையில் மெனாரா பெல்டா, பிளாட்டினம் பார்க், பெர்சியாரான் கேஎல்சிசி ஆகிய இடங்களில் இந்த குற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணை அடுத்த திங்கள்கிழமை தொடரும்.