Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய செம்பனை எண்ணெய்க்கு கட்டுப்பாடுகள் விதிக்காதீர்கள் –மோடிக்கு தமிழகக் காங்கிரஸ் கோரிக்கை

மலேசிய செம்பனை எண்ணெய்க்கு கட்டுப்பாடுகள் விதிக்காதீர்கள் –மோடிக்கு தமிழகக் காங்கிரஸ் கோரிக்கை

710
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவின் பல வணிக அமைப்புகள் மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராகத் தடைகள் விதிக்க வேண்டும் என்ற நிலையில் அதற்கு நேர்மாறாக, “மலேசிய செம்பனை எண்ணெய்க்குத் தடை விதிக்காதீர்கள். அதனால், மலேசியாவில் வேலை செய்யும் சுமார் 5 இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் பாதிப்படைவர் என தமிழகக் காங்கிரசின் தலைவர் கே.எஸ். அழகிரி இந்தியப் பிரதமர் மோடிக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மலேசியாவில் தொழில்நுட்பத் துறையிலும், மற்ற தொழில்களிலும் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக் காட்டிய தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இதனால் மலேசியாவிலுள்ள இந்தியத் தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்குவர் என்றும், அவர்கள் சம்பாதிப்பதில் 90 விழுக்காடு பணத்தை தங்களின் தாய்த் தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி உலகிலேயே வங்கிகளின் மூலம் பணத்தைப் பெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 331 பில்லியன் ரிங்கிட் (79 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து இந்தியா பெற்றது.

#TamilSchoolmychoice

இதில் பெரும்பாலான தொகை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்ததாகும். அந்தப் பட்டியலில் மலேசியா 20வது இடத்தை வகிக்கிறது.

மலேசியாவின் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களில் கணிசமான பிரிவினர் மலேசியாவின் தோட்டப் புறங்களில் பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களும் மலேசிய செம்பனை எண்ணெய் தடை செய்யப்படும் இந்தியாவின் முடிவால் பாதிப்படைவர் என்றும் அழகிரி கூறியிருக்கிறார்.

எனவே, மலேசியாவின் செம்பனை எண்ணெய் மீதான தடைகளையோ, கட்டுப்பாடுகளையோ அமுல்படுத்த வேண்டாம் என மோடிக்கு அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.