Home கலை உலகம் “வெண்ணிற இரவுகள் ஒரு சுகமான காதல் கதை” – இயக்குனர் பிரகாஷுடன் ஒரு மாலை நேர...

“வெண்ணிற இரவுகள் ஒரு சுகமான காதல் கதை” – இயக்குனர் பிரகாஷுடன் ஒரு மாலை நேர சந்திப்பு!

1317
0
SHARE
Ad

1011178_10200995789632572_669019827_n

ஜூலை 22 – ஆர்.பிரகாஷ் ராஜாராம் … மலேசிய திரைப்படத்தை உலக அளவில் கொண்டு சென்ற நம்பிக்கை நட்சத்திரம். பினாங்கு யு.எஸ்.எம் பல்கலைக்கழகத்தில் இயக்குனருக்கான படிப்பை முடித்து, உள்ளூர் தொலைகாட்சியான ஆர்.டி.எம் மில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட நாடகங்களையும், குறும்படங்களையும் இயக்கியவர்.

தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஷைன் என்டர்டெய்ன்மென்ட்’ மூலம் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற திரைப்படத்தை இயக்கி அதை நோர்வே திரைப்பட விழாவில் இடம்பெறச் செய்ததோடு, மியான்மர், ஆஸ்திரேலியா, லண்டன், தென்ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலும் வெளியிட முயற்சிகள் எடுத்து வருகிறார்.

#TamilSchoolmychoice

‘வெண்ணிற இரவுகள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிடுவது தொடர்பாக பரபரப்பாக இருந்தவரிடம் ஒரு பேட்டி வேண்டும் என்று கேட்டவுடன் மதியம் 3 மணிக்கு மேல் வாருங்கள் என்று கூறினார் உற்சாகத்தோடு.

அவருடன் பேசிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ….

செல்லியல்: ‘வெண்ணிற இரவுகள்’ என்ற ஒரு அருமையான காதல் கதையை படமாக்கி, அதை நோர்வே திரைப்பட விழா வரைக்கும் கொண்டு சேர்த்துடீங்க. இப்ப எப்படி இருக்கு உங்க மனநிலை?

பிரகாஷ்: ரொம்ப திருப்தியா இருக்கு. இருந்தாலும் மனசுல ஒரு சின்ன படபடப்பு இருந்துகிட்டே தான் இருக்கு. நம்ம மலேசிய மக்கள் இந்த படத்தை பாத்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் போது அவங்க முகத்துல சந்தோஷத்த பாத்த பிறகு தான் நிம்மதி வரும்.

படத்தோட டீசரை நோர்வே திரைப்பட விழாவிற்கு அனுப்பி வச்சோம்.அதுக்கு அவங்க கிட்ட இருந்து உடனடியா நல்ல பதில் வந்தது. கும்கி, வழக்கு எண் போன்ற தமிழகப் படங்களோட சேர்த்து வெண்ணிற இரவுகளையும் வெளியிட்டாங்க.

நோர்வே திரைப்பட விழாவில் திரையிட்ட போது அங்கு வந்திருந்த தமிழக இயக்குனர்களான பாலாஜி சக்திவேல், பிரபு சாலமன், லிங்குசாமி போன்றவர்கள் படம் உண்மையில் ரொம்ப வித்தியாசமா இருக்குன்னு பாராட்டினாங்க. அவங்களுக்கு நம்ம கலாச்சாரம் ரொம்ப புதிசா இருந்தது.

487455_462044507184117_826748882_nசெல்லியல்: படத்தோட கதாநாயகன் மகின் மற்றும் கதாநாயகி சங்கீதா எப்படி நடிச்சிருக்காங்க?

பிரகாஷ் : அவங்க ரெண்டு பேரும் தான் படத்துக்கு மிகப் பெரிய பலம். அவங்க இந்த படத்துக்காக தனியா பயிற்சியெல்லாம் எடுக்கல. நிஜ வாழ்க்கையில் அவங்க ரெண்டு பேரும் எப்படி இயல்பா இருப்பாங்களோ அதை தான் படத்துல செஞ்சிருக்காங்க. அவங்களோட சேர்ந்து இந்த படத்துல சைக்கோ மந்த்ராவும் முக்கிய கதாப்பாத்திரத்துல நடிச்சிருக்காக. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

செல்லியல்: ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கும் நீங்க எந்த மாதிரியான இயக்குனர்?

பிரகாஷ் : என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு படத்திற்கு கதை தான் முக்கியம். கதை நல்லா இருந்தா அந்த படத்தை மக்கள் கண்டிப்பா ரசிப்பாங்க. அந்த கதை அவங்களோட வாழ்க்கையில நடந்த சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைக்கனும். அப்போ தான் படம் பாக்குறவங்க அந்த கதையோட ஒன்றிப் போவாங்க. அது தான் ஒரு இயக்குனருக்கான உண்மையான வெற்றி.

செல்லியல்: இந்தியா படங்கள் மாதிரி மலேசியப் படங்களுக்கு அதிக அளவு செலவு செய்ய தயாரிப்பாளர்கள் முன்வருவதில்லை என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறதே அது பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

பிரகாஷ் : முதல்ல மலேசியப் படங்களை இந்தியப் படங்களோட ஒப்பிட்டு பாக்குறத நிறுத்தணும். அவங்க  கலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற. அங்க கதாநாயகனுக்கு தகுந்த மாதிரி தான் கதையே உருவாக்கப்படுது.ஆனா நாம அப்படி இருக்க முடியாது. நம்முடைய மலேசிய மக்களோட கலாச்சாரங்களையும், அடையாளங்களையும் படமா எடுக்கணும். அவங்கள மாதிரி நாம படம் எடுக்கனும்னு நினைக்கக்கூடாது.

நல்லா யோசிச்சு பாருங்க. இன்னைக்கு உலக அளவில் தமிழ் சினிமா அப்படின்னா, அது தமிழக படங்களா மட்டும் தான் இருந்துகிட்டு வருது. எல்லா நாட்டுலையும் தமிழர்கள் வாழ்றாங்க. தென் ஆப்பிரிக்கா நாட்டுல 6 தலைமுறைகளா தமிழர்கள் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. நிறைய பேருக்கு மியான்மர் நாட்டுல தமிழர்கள் இருக்காங்கன்னே தெரியாது. அப்படி வாழுற தமிழர்கள் கிட்டையும் நிறைய திறமைகள் இருக்கு. அவங்க மனசுலையும் நல்ல நல்ல கதைகள் இருக்கு. அதையெல்லாம் படமாக்கணும். அப்பதான் உலக அளவில் தமிழ் சினிமாக்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவும்.

செல்லியல் : மலேசிய சினிமாக்கள் ரொம்ப காலமா திகில் கதைகளையும், பேய் கதைகளையும் மட்டுமே மையமா வச்சு உருவாக்கப்பட்டு வருகிறது. அதுல ஒரு சில படங்கள் மட்டும் தான் வேறு கதைக்களங்களில் எடுக்கப்படுது. அதைப் பற்றி உங்க கருத்து என்ன?

பிரகாஷ் : இந்தியாவில பேய் படங்கள் அதிகமா எடுக்குறது இல்ல. அதனால நாம வித்தியாசமா பேய் படம் எடுப்போம்னு ஆரம்பத்துல நிறைய இயக்குனர்கள் நினைச்சாங்க. ஆனால் இப்போ மக்களோட ரசனையும் மாறிப்போச்சு. மலேசிய படம்னு சொன்னாலே அது இப்படி தான் இருக்கும்னு மக்களே முடிவு பண்ற அளவுக்கு தொடர்ச்சியா திகில் படங்களும், பேய் படங்களுமா வெளிவந்துகிட்டு இருக்கு. அந்த நிலையை மாத்தணும்.மலேசியப் படங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வைக்கணும். அதுக்கு பல வித்தியாசமான கதைகளை படமா எடுக்கணும். மலேசியப் படங்கள் மீது இருக்குற மக்களின் எண்ணத்தை மாத்தணும்னு தான் ரொம்ப கஷ்டப்பட்டு, நிறைய செலவு செஞ்சி மலேசியா, சிங்கப்பூர், மியான்மர்னு சுத்தி சுத்தி இந்த படத்தை எடுத்திருக்கோம்.

செல்லியல் : சரி … ‘வெண்ணிற இரவுகள்’ கதையை பற்றி ஒரு வரியில சொல்லுங்க?

பிரகாஷ் : (சிரிக்கிறார்)  இப்படி ஒரு கேள்வி எல்லா இயக்குனர்கள் கிட்டையும் அடிக்கடி கேட்கப்படுது. ஒரு வரியில எப்படி கதை சொல்ல முடியும்.

(சரி … அப்போ முழு கதையையும் சொல்லுங்க என்று போட்டு வாங்க முயற்சித்தோம்) ஒரு மனிதனுக்கு அவன் வாழ்க்கையில் வரும் இரண்டாவது காதல்.. அது பற்றிய தவிப்பு… இது தான் கதை.

செல்லியல் : அப்படின்னா …இது உங்க சொந்த வாழ்க்கையில நடந்த கதையா?

பிரகாஷ் : (இன்னும் சத்தமாக சிரிக்கிறார்) … ஒரு சில விஷயங்கள் என்னோட சொந்த வாழ்க்கையில நடந்தது. அப்புறம் என்னோட நண்பர்கள் மூலம் பார்த்த, கேட்ட விஷயங்களை வைத்து ஒரு அழகான காதல் கதைய உருவாக்கியிருக்கேன்.

செல்லியல் : படத்தோட இசை பற்றி சொல்லுங்களேன்?397756_4953706916103_2104343261_n

பிரகாஷ்  : படத்துக்கு இன்னொரு பலம் சேர்ப்பது இசை தான். இது வரைக்கும் ராப் பாடல்களுக்கு இசையமைத்து வந்த லோரன்ஸ் சூசை இந்த படத்துக்கு கொஞ்சம் வித்தியாசமா மெலோடி இசைய கொடுத்திருக்காரு. அவரும், சாருமதியும் சில பாடல்களைப் பாடியிருக்காங்க. இது தவிர டேடி சேக் ஒரு பாடலுக்கு இசையமைச்சு, அவரும் ஷீஜேவும் சேர்ந்து பாடியிருக்காங்க. படத்துல மொத்தம் 4 பாட்டு இருக்கு. அதுல ஒரு பாட்டு விஸ்வரூபம் படத்துல நடிச்ச பிரபல நடிகை ஆண்ட்ரியா பாடுறாங்க.

செல்லியல் : இந்தியாவில்  இருந்து கலைஞர்களை அழைத்து வந்து மலேசிய படங்களில் நடிக்க வைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பிரகாஷ் : இந்தியாவில் உள்ள நல்ல திறமைசாலிகளான நடிகர்களை மலேசியப் படங்களில் நடிக்க வைக்கலாம். நான் வேண்டாம்னு சொல்லல. ஆனால் யார நடிக்க வைக்கிறோம் என்பது தான் முக்கியம். அங்க உள்ள படங்களிலேயே நடிக்க முடியாம வீட்டில் இருக்குறவங்களைக் கொண்டு வந்து இங்க நடிக்க வைப்பதில் என்ன இருக்கு? அதுக்கு இங்கயே எத்தனையோ திறமைசாலிகள் இருக்காங்களே அவங்கள நடிக்க வைக்கலாமே.

செல்லியல் : எப்போ உங்க கவிதையை வெளியிடப் போறீங்க? (குழப்பமாக பார்க்கிறார்) வெண்ணிற இரவுகள் படத்தை தான் அப்படி சொன்னேன்…

பிரகாஷ் : (அதே சிரிப்பு) … படத்தோட முன்னோட்டம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் இப்ப நடந்துகிட்டு வருது. அதோடு பாடல்களையும் விரைவில் வெளியிடப்போறோம். அதை மக்கள் இலவசமா இணையத்தில் இருந்து டவுன்லோடு செஞ்சிக்கலாம்.

படம் வெளியிடுறதுக்கு முன்னாடி, நம்ம மலேசிய மக்கள் கிட்ட ஒரு கருத்துக்கணிப்பு நடத்திக்கிட்டு இருக்கோம். அது என்னன்னா, மலேசிய படங்கள்ல மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன? அவங்க எப்படிப்பட்ட படங்களை விரும்புறாங்க? இன்னும் நாம எந்த வகையில மாத்திக்கணும் இதெல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம், மலேசிய இயக்குனர்கள் எல்லோரையும் சந்திச்சு அந்த கருத்துக்கணிப்பை கொடுக்க முடிவுசெஞ்சிருக்கோம். ‘வெண்ணிற இரவுகள்’ வரும் செப்டம்பர் முதல் வாரத்துல திரைக்கு வரும்.

செல்லியல் : இனி தொலைக்காட்சி தொடர்களை தொடர்ந்து இயக்குவீங்களா?

பிரகாஷ் : கொஞ்ச நாளைக்கு தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்போறது இல்லை. படங்கள் மட்டுமே இயக்கப்போறேன். அடுத்து மியான்மர் படம் ஒன்னு இயக்கப்போறேன். அவங்க நாட்டு ‘பர்மிஸ்’ மொழியில அந்த படம் இருக்கும். மலேசியாவுல தான் அந்த படத்த சூட் பண்ணப்போறோம்.

இப்படிப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்களுடன் இயக்குனர் பிரகாஷுடனான அந்த மாலை நேர சந்திப்பு இனிமையாக முடிந்தது.

கடைசியாக, ஆமா எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க என்று கேட்டேன். முகத்தில் ஆயிரம் கனவுகளோடு வெண்ணிற இரவுகள் வெளிவரட்டும் என்பதை ஒற்றை பதிலாய் தந்தார்.

– பீனிக்ஸ்தாசன்