கோலாலம்பூர், டிசம்பர் 5 – மஇகாவுக்கு மறு தேர்தல் என உத்தரவிட்டு சங்கப் பதிவதிகாரி மஇகா தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார் என இன்று மாலை முதல் தகவல்கள் பரவத் தொடங்கியது.
உடனடியாக மஇகா வட்டாரங்கள் நாடு முழுவதும் சுறுசுறுப்படைந்தன. அங்கும் இங்கும் தொலைபேசி வழியும், அலைபேசி வழியும் தகவல்கள் சூடுபறக்க, பரிமாறப்பட்டன.
வாட்ஸ்எப், ஃபேஸ் புக் என நட்பு ஊடகங்களில் செய்திகள் அல்லோலப்பட்டன.
நேரம் ஆக, நேரம் ஆக, இரவுக்குள், வெளிவந்த உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி, கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற கட்சித் தேர்தல்கள் செல்லாது என்றும் அந்தப் பதவிகளுக்கெல்லாம் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சங்கப் பதிவிலாகா உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
அதன்படி 3 உதவித் தலைவர்கள், 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிகளுக்கும் மீண்டும் மறுதேர்தல் என்பது உறுதியாகிவிட்டது.
இளைஞர் மகளிர் பதவிகளுக்கும் கூட மறுதேர்தல் நடத்தப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தேசியத் தலைவரும், தேசியத் துணைத் தலைவரும் ஏகமனதாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பதவிகளுக்கு மறு தேர்தல் இல்லை.
அதோடு 8 தொகுதிகளுக்கும் மேலும் 2 மஇகா கிளைகளுக்கும் கூட மறுதேர்தல் என சங்கப் பதிவிலாகா தனக்குக் கிடைத்த புகார்களின் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் 4 தொகுதி காங்கிரசுகளில் சில பதவிகளுக்கு மட்டும் மறுதேர்தல் நடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மீண்டும் நடைபெறும் மஇகா தேர்தல்களுக்காக வேட்பாளர் நியமனங்களும் – சட்டப்படி பார்த்தால் – மீண்டும் நடைபெற வேண்டும். காரணம் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்படவிருக்கும் மஇகா தொகுதிக் காங்கிரஸ் தேர்தல்களின் வழி வென்று வருபவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
எனவே, முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட கிளைத் தேர்தல்களும், தொகுதிக் காங்கிரஸ் தேர்தல்களும் முதலில் நடத்தப்பட வேண்டும். அதன்பின்னர், தேசிய நிலையிலான பதவிகளுக்கான வேட்பாளர் நியமனங்கள் நடைபெறும்.
ஆக, மஇகா மறுதேர்தல் மீண்டும் நடைபெற ஏறத்தாழ இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம். பத்திரிக்கை ஆரூடங்களின்படி அடுத்த மூன்று மாதங்களுக்குள் மறு தேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவிலாகா உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
நாளை, சனிக்கிழமை காலை 11 மணியளவில் மஇகா தலைமையகத்தில், கட்சியின் தலைமைச் செயலாளர் பிரகாஷ்ராவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.