Home அவசியம் படிக்க வேண்டியவை தமிழ்ப் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்திய அஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி – நேர்காணல்

தமிழ்ப் பயன்பாட்டை பன்மடங்கு உயர்த்திய அஸ்ட்ரோ டாக்டர் ராஜாமணி – நேர்காணல்

1113
0
SHARE
Ad

 

D2X_8222
டாக்டர் ராஜாமணி செல்லமுத்து

அறிமுகம்

டந்த 1980, 90-ம் ஆண்டுகளில் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மொழி மீது பற்று கொண்ட இயக்கங்களிடையே இரண்டு முக்கிய விவகாரங்கள் விவாதப் பொருளாக வலம் வந்தன. தமிழ் மொழி அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட கருத்தரங்குகள், சந்திப்புகள், இலக்கிய நிகழ்வுகள் என எந்த நிகழ்வாக இருந்தாலும் கலந்து கொள்கின்ற தலைவர்களும் மற்றவர்களும் நிச்சயம் இந்த இரண்டு விவகாரத்தைப் பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள்.

#TamilSchoolmychoice

முதலாவது, அடுத்த இருபது ஆண்டுகளில் தமிழில் பயன்பாடும் முக்கியத்துவமும் எவ்வாறு இருக்கும் என்பது. எதிர்வரும் காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை நிலைத்திருக்குமா, தமிழைப் படித்தவர்கள் அதனைப் பயன்படுத்த வாய்ப்பிருக்குமா, மக்கள் தமிழில் உரையாடுவார்களா, தமிழை தமிழர் வீடுகளுக்குள் கொண்டு சென்று சேர்ப்பது எப்படி, நிலைத்திருக்கச் செய்வது என்றெல்லாம் எழுந்த கேள்விகள்.

இரண்டாவது விவகாரம், வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழ் மொழியும், தமிழ் நாடகங்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் அதிகம் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள்தான் எங்கு சென்றாலும் அதிகம் விவாதிக்கப்படும்.

ஒரே ஒரு தமிழ் நாடகத்தை தொலைக்காட்சியில் ஒளியேற்ற மஇகாவைச் சேர்ந்த இந்திய அரசியல் தலைவர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டார்கள் என்பதும், அந்த மாதிரியான நாடகங்களுக்கு வர்த்தக ரீதியான ஆதரவை நிறுவனங்களிடமிருந்து பெற எவ்வளவு சிரமங்கள் இருந்தன என்பதையும் விவரித்தால் அதுவே ஒரு தனிக் கட்டுரையாக நீளும்,

பொதுத் தேர்தல் நடக்கும் கால கட்டங்களில் ஆர்டிஎம் தினசரி ஒரு தமிழ்ப் படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப, அதனால், தமிழர்கள் தங்கள் ஜென்மமே சாபவிமோசனம் பெற்றுவிட்டதுபோல் அகமகிழ்ந்து, தேசிய முன்னணிக்கு தங்களின் வாக்குகளை அள்ளிவழங்கிய காலகட்டங்களும் மலேசியத் தமிழர் வரலாற்றில் உண்டு.

Ravi Shanker_Siva_Dr Raj
அஸ்ட்ரோ சிறந்த ஒளிபரப்பிற்காக விருது விழாவில்

1997ஆம் ஆண்டுவாக்கில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்ட்ரோ தனியார் தொலைக்காட்சி மூலம் மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு விவகாரங்களுக்கும் ஒருசேர தீர்வு கிடைத்தது என்பதும் அதற்கு மூலகாரணமாகத் திகழ்ந்தவர் அஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவுக்கு தலைமையேற்ற டாக்டர் ராஜாமணி செல்லமுத்து தான் என்பதும் யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

இன்றைக்கு தமிழில் பாடுகின்றவர்கள் “வானவில் சூப்பர் ஸ்டார்” நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பாக மக்கள் கண்டு, கேட்டு மகிழும் வண்ணம் பாடுகின்றார்கள். தமிழ்ப் பாட்டுக்கு, ஆட்டம் போட நினைப்பவர்கள் “ஆட்டம் நூறுவகை” என ஆட்டம் போடுகின்றார்கள். கருத்து சொல்ல நினைப்பவர்கள் “விழுதுகளில்” வலம் வருகின்றார்கள். தமிழ் மாணவர்கள் ‘பட்டிமன்றங்கள்’ நடத்தி தங்களின் தமிழ்த் திறனை அரங்கேற்றுகின்றார்கள். பொதுமக்கள் சந்திப்போம் சிந்திப்போம் அங்கங்களின் வாயிலாக கருத்துமழை பொழிகின்றார்கள். மருத்துவர்கள் தமிழில் சுகாதாரப் பிரச்சனைகளைப் பற்றி மக்களுக்கு விளக்குகின்றார்கள்.

unnamed
அஸ்ட்ரோ மற்றும் தொலைக்காட்சி தமிழ் அலைவரிசைகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக சைமா -வின் சிறப்பு விருது

தொலைக்காட்சியில் வாரம் ஒரு தமிழ்ப்படத்திற்காக குதூகலித்த இந்திய சமுதாயம் இன்றைக்கு 15 அலைவரிசைகளில் மூழ்கிக்கிடக்கின்றது.

இப்படியாக, சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் காரணகர்த்தாவான, மலேசியாவில் தமிழின் பயன்பாட்டின் முகத்தையே – வரலாற்றையே மாற்றியமைத்த டாக்டர் ராஜாமணிக்கு அண்மையில் கோலாலம்பூரில் நடந்த ‘சைமா’ என்ற தென்னிந்திய திரைப்பட விழாவில் சிறப்பு விருது ஒன்றை வழங்கி கௌரவித்தார்கள். மலேசியாவில் தமிழ் தொலைக்காட்சி வளர்ச்சிக்கும், தொலைக்காட்சித் துறையில் இந்திய-மலேசிய நல்லுறவை வளர்த்ததற்காகவும் வழங்கப்பட்ட பொருத்தமான விருது அது.

அப்போது முதல் அவருக்குக் கிடைத்த பாராட்டை கௌரவிக்கும் வகையில் அவருடன் நேரடி சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் என ‘செல்லியல்’ முயற்சி செய்து வந்தது. ராஜாமணியின் வேலைப்பளுவின் காரணமாக அண்மையில் தான் அந்த சந்திப்பு சாத்தியமானது.

செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன், துணை ஆசிரியர் ஃபீனிக்ஸ்தாசன் ஆகியோரோடு நிகழ்ந்த டாக்டர் ராஜாமணியின் நேர்காணலின் போது அவரது உரையாடலின் சில முக்கிய பகுதிகளை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்:

ஊடகத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

ஒரு அறிவியல் அறிஞராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். அதற்காக தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் எனது தந்தையின் திடீர் மறைவால், குடும்பத்திற்காக ஆசிரியராக பணியாற்ற எண்ணிய போது, எனது கல்லூரிப் பேராசிரியர் என்னை ஊடகத்துறைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். அவர் தான் நான் ஊடகத்துறைக்கு வர உறுதுணையாக இருந்தார். ஏனென்றால் கல்லூரி நாட்களில் ஆடல்,பாடல், மிமிக்ரி போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை வாங்கியிருக்கிறேன். அதனால் நான் ஊடகத்துறைக்கு செல்வது தான் சிறந்தது என்று என் கல்லூரிப் பேராசிரியர் ஊக்கம் அளித்தார்.

’வல்லவர் 2014’ அறிமுக விழாவில் நடிகர் ரியாஸ்கானுடன் செய்தியாளர் சந்திப்பில்

ஆனால் அன்றைய காலத்தில் ஊடகம் என்றால் வானொலி மட்டும் தான். தொலைக்காட்சிகள் எல்லாம் அப்போது இல்லை. அந்த சமயத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் ஃபிரீலேன்சர் என்று சொல்லக்கூடிய பகுதி நேர பணியாளராக பணியாற்றினேன். அப்போது சென்னைத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன்.

என்னை நேர்காணல் செய்த வெள்ளைக்காரர். உயர்வான ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு ஏன் ஊடகத்துறைக்கு வருகிறாய் என்று கேட்டார். அதற்கு நான் “ஆசிரியராக இருந்தால் ஒரு வகுப்பில் 40 மாணவர்களுக்கு தான் பாடம் நடத்த முடியும். அதே தொலைக்காட்சியாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் பாடம் நடத்த முடியும்” என்று கூறினேன். அதற்கு அங்கிருந்த அனைவரும் கைதட்டினர்.

அதன் பின்னர் தொலைக்காட்சியில் சேர்ந்த பிறகு, தொலைக்காட்சி ஆரம்பிப்பது குறித்து முன்னணி நடிகர்களிடம் சென்று கருத்து கேட்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்தித்தோம். அப்போது அவர் சென்னையில் இருக்கும் நாங்கள் தொலைக்காட்சி பார்க்க முடியும். சூரக்கோட்டையில் இருக்கும் எனது உற்றார் உறவினர்கள் பார்க்க முடியுமா என்றார். இல்லை ஐயா சென்னையில் இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்க முடியும் என்றோம். அதற்கு சினிமா எல்லா ஊர்களுக்கும் போகும் போது, தொலைக்காட்சி ஏன் போக முடியாது என்று அப்போதே கேட்டவர் சிவாஜி. அவர் சொன்னபடி இன்று தொலைக்காட்சி உலகளவில் சென்று விட்டது.

சென்னைத் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்?

சென்னைத் தொலைக்காட்சியில் நாங்கள் தயாரித்த வாழ்க்கைக் கல்வி என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதில் மூன்று அங்கங்களை வைத்தோம். ஒன்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இரண்டாவது விழிப்புணர்வை வந்த பின்பு அதை செயல்முறைப்படுத்துவது. மூன்றாவது செயல்முறைப்படுத்திய பின்பு அதன் மூலம் வருமானம் ஈட்டுவது இந்த ஒரு திட்டத்தோடு தான் அந்த நிகழ்ச்சியை உருவாக்கினோம்.

அதன் பின்பு நான், இந்தியாவின் நம்பர் ஒன் கல்வி நிறுவனமான பூனா ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்றேன். அங்கு தான் அமிதாப் பச்சன், பாலு மகேந்திரா ஆகியோர் படித்தனர். அங்கு பயிற்சி பெற்ற பின்னர் டாக்குமெண்டரி என்று சொல்லப்படும் விளக்கப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்தேன்.

unnamed (1)
மருத்துவ முகாமில் அஸ்ட்ரோவின் சிறப்பாக பங்களிப்பிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் விருது வழங்கிய போது

அந்த விளக்கப் படங்களில் ஒன்றான “பியாண்டு த ஸ்ட்ராம்” (Beyond the Storm), எனக்கு மிகப் பெரிய பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கித் தந்தது. தொழு நோய் வந்த பிறகு ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களையும், அதை கடந்து அவர் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைகளையும், அதன் மூலம் இந்த சமூகம் அவருக்கு செய்யும் உதவிகளையும் சொல்லும் விளக்கப் படம் தான் அது. 60 உலக நாடுகள் பங்கேற்ற அந்த போட்டியில், சுமார் 120 விளக்கப்படங்களில் ஒன்றாக “பியாண்டு த ஸ்ட்ராம்” தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதன் பின்பு, டாக்டர் இராதாகிருஷ்ணனை பற்றி உருவாக்கிய விளக்கப்படத்திற்கு எனக்கு ரஷ்யாவில் மிகப் பெரிய விருது கிடைத்தது. பின்னர் கரும்பு ஆலைக் கழிவுகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் ஒரு விளக்கப்படம் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அதை விட முக்கியமாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து நான் தயாரித்த “எனிமி விதின் அஸ்” (Enemy within us) என்ற விளக்கப்படத்திற்கு ஜப்பானின் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.  அதாவது பெண்களுக்கு எதிரி வேறு எங்கும் அல்ல. அவளது குடும்பத்திலேயே தான் இருக்கின்றார்கள். உசிலம்பட்டி என்ற கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் சிசுவிலேயே கள்ளிப் பால் கொடுத்து கொல்வது. ஆண்களை மட்டுமே சொத்துகளில் வாரிசுகளாக சேர்ப்பது, மாமியார் கொடுமை என அன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்தன. அதை மையக்கருத்தாக வைத்து தான் இந்த விளக்கப்படத்தை உருவாக்கினேன்.

சென்னையில் இருந்து மலேசியாவிற்கு வந்தது பற்றி?

சிறிய வயது முதலே எனக்கு அமெரிக்காவில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அப்போது படிக்கமுடியவில்லை. ஆனால் அதன் பின்னர் நான் வேலையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியவுடன், 1989 -ல் நியூயார்க்கில் உள்ள சிராக்யூஸ் பல்கலைக்கழகத்தில் (Syracuse University) ஊடகத்துறையில் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அந்த பல்கலைக்கழகம் ஊடகத்துறை படிப்பிற்கென முதல் தரமான கல்வி நிறுவனம். அங்கு நடிப்பு, இயக்கம், தொலைக்காட்சி தயாரிப்பு போன்றவற்றில் அட்வான்ஸ் லெவல் என்று சொல்லக்கூடிய மேம்பட்ட படிப்பை கற்றேன். படிப்பு முடித்த போது அங்கேயே எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவற்றை வேண்டாம் என்று எண்ணி மீண்டும் இந்தியாவிற்கே சென்றேன்.

unnamed (2)
அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சிப் படங்கள் அறிமுக விழாவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுடன்

நான் அமெரிக்கா, ஜப்பான், லண்டன், சிங்கப்பூர் என பல நாடுகளுக்கு போயிருந்தாலும், அந்த சூழ்நிலையில் நான் மலேசியாவிற்கு வந்ததே இல்லை. எனக்கு இந்த நாட்டில் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அந்த சமயத்தில் தான் எனக்கு அஸ்ட்ரோ தொலைக்காட்சி வாய்ப்பு வந்தது. முதலில் அரசாங்க வேலையை விட்டு ஏன் இங்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் மீண்டும் ஒரு அழைப்பு வந்த போது மறுக்காமல் இங்கு வந்து விட்டேன். நான் வந்த சமயத்தில் வானவில் அலைவரிசை மட்டும் தான் இருந்தது. இன்று கணக்கிட்டால் 15 அலைவரிசைகள் இருக்கின்றன.

17 ஆண்டுகாலம் அஸ்ட்ரோ அனுபவம் பற்றி?

ஒரு மனிதனுக்கு அவன் பணிபுரியும் இடத்தில் வேலையில் திருப்தி ஏற்பட வேண்டும். தனது திறமைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். இந்த இரண்டும் எனக்கு அஸ்ட்ரோவில் கிடைத்தது. அதே போல் தமிழ்நாட்டில் இருந்த போது எப்படி தமிழர்களிடத்தில் இணை பிரியாத தொடர்பு இருந்ததோ அப்படி ஒரு தொடர்பு மலேசியத் தமிழர்களிடத்திலும் உள்ளது.

unnamed (3)
யுத்தமேடை நிகழ்ச்சி துவக்க விழாவில் நடிகர் நாகேந்திர பிரசாத் மற்றும் நடிகை ரோஜாவுடன்

ஊடகப் படிப்பில் எனது விரிவுரையாளரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட முக்கியமான விசயம் என்னவென்றால், நமது படைப்புகளுக்கு மக்களிடத்தில் இருந்து விமர்சனங்கள் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் அதை செய்வதில் அர்த்தமில்லை. அப்துல் கலாமையோ அல்லது மயில்சாமியையோ “இவர்கள் என்ன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் செய்கிறார்கள்?” என்று மக்கள் விமர்சிக்க மாட்டார்கள்.ஆனால் ஊடகத்துறை, சினிமாத்துறை போன்றவற்றில் தான் மக்கள் போகிற போக்கில் மிக எளிதாக விமர்சித்து விடுவார்கள். எனவே மக்களுக்கு எது தேவையோ அதை வழங்குவது என்ற விசயத்தில் நாங்கள் மிக கவனமாக இருக்கின்றோம். இன்னைக்கு மலேசியாவில் 10 இந்தியர்களில் 8 பேர் வீட்டில் அஸ்ட்ரோ அலைவரிசைகள் இருப்பதற்குக் காரணம் மக்கள் கொடுக்கும் வரவேற்பு தான். அதனால் தான் மக்களிடத்தில் இருந்து ஒரு சின்ன கருத்து வந்தால் அதை கவனமாக உள்வாங்கிக் கொள்வேன். காரணம் அவர்கள் அத்தனை வேலைகளுக்கிடையில் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் நம் மேல் இருக்கின்ற அக்கறையில் தான் சொல்கிறார்கள். அதனால் தான் நான் அடிக்கடி எனது குழுவினரிடம் சொல்வேன்.  “நமது உயிர் மக்களின் விரல் நுனியில் ஊசலாடுகின்றது”. அதாவது இன்னைக்கு எத்தனையோ அலைவரிகள் இருக்கின்றன. நமது நிகழ்ச்சிகள் ஒரு 5 நிமிடங்கள் நன்றாக இல்லையென்றால் கூட உடனடியாக வேறு அலைவரிசைகளை மாற்றிவிடுவார்கள். அதனால் மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளைக் கொடுத்து அவர்களை பார்க்க வைப்பதே பெரிய சவால்.

இன்றைய காலத்தில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது எல்லோரும் லேப்டாப்பில் நிகழ்ச்சிகள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அப்படிப்பட்ட மக்களுக்காக எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு  ‘அஸ்ட்ரோ உலகம்’, ‘அஸ்ட்ரோ ஆன் தி கோ’ போன்றவற்றைக் கொண்டு வந்தோம். அதுமட்டுமின்றி இளைஞர்களைக் கவர சன் மியூசிக் போன்ற அலைவரிசைகளில் சேட்டிங் வசதிகளை ஏற்படுத்தினோம். அந்த சேட்டிங் வசதிகள் மூலம் நேரடியாக அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரபலத்துடன் தொலைக்காட்சி ரசிகர்கள் உரையாடலாம். தமிழ்நாட்டில் கூட இந்த வசதிகள் இல்லை.

அஸ்ட்ரோவில் தமிழுக்கு கொடுக்கப்பட்டு வரும் அதிக முக்கியத்துவம்?

எனக்கு சிறு வயது முதல் தமிழ் மீது பற்று அதிகம். யுனெஸ்கோவில் ‘கூரியர்’ என்று ஒரு இதழ் வெளிவருகின்றது. அதன் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்களுக்காக நிறைய தமிழ் மொழிபெயர்ப்புகளை செய்து கொடுத்திருக்கின்றேன். அதுமட்டுமின்றி சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்ற விருதையும் பெற்றிருக்கின்றேன். அதனால் தமிழ் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான பற்று. தமிழராகிய நாம் தமிழை பாதுகாக்கவில்லை என்றால் வேறு யார் பாதுகாப்பார்கள்.

unnamed (5)
ஆதிபகவன் திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் ஜெயம்ரவியுடன்

அஸ்ட்ரோ அறிவிப்பாளர்கள் ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால் கூட மறுநாள் போர்கணைகள் தொடுப்பது போல் மக்கள் எங்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் தான் அஸ்ட்ரோவில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.இதை செய்யவில்லை என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் பேசினால் புரியவில்லை என்ற நிலை கூட நம் எதிர்கால சந்ததியினரிடம் ஏற்படும். பின் எப்படி தமிழ் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் இயங்கும்.

நீங்கள் சந்தித்தவர்களில் மறக்க முடியாத பிரபலம் யார்?

மறக்க முடியாத பிரபலம் என்றால் கமல்ஹாசனை தான் சொல்ல வேண்டும். காரணம் கமல் நமது அலுவலகத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறார். மற்ற கலைஞர்கள் எல்லாம் வந்தார்கள் என்றால் அவர்கள் பணி முடிந்தவுடன் சென்று விடுவார்கள். கமல் வந்த போது ஸ்டுடியோவை சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அப்போது நமது அஸ்ட்ரோ ஓ.பி வேனைப் பார்வையிட (Outside Broadcast van) அழைத்துச் சென்றோம். நமது அஸ்ட்ரோ ஓ.பி வேன் சற்று சிறப்பு வாய்ந்தது. காரணம் மற்ற நிறுவனங்களில் ஓபி வேன்கள் எப்படி இருக்கும் என்றால், சோனி நிறுவனம் என்றால் அந்த ஓபி வேனில் எல்லாமே சோனியின் தயாரிப்புகளை கொண்டிருக்கும்.

IMG_7713
பத்மஸ்ரீ கமலஹாசன் அஸ்ட்ரோ அலுவலகத்தை பார்வையிட்ட போது ….

ஆனால் அஸ்ட்ரோ ஓபி வேனில் எந்தெந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்போ அது அத்தனையும் கொண்டு உருவாக்கியிருப்போம். உதாரணமாக ஆடியோவுக்கு யமஹா, கேமரா லென்ஸ் என்றால் ஃபியுஜி என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வடிவமைத்திருப்போம். கமல்ஹாசனை எங்கள் ஓபி வேனிற்கு அழைத்துச் சென்ற வெள்ளைக்காரர் ஒருவர் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அப்போது கமல்ஹாசன், “இதை விட மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு ஒன்று வந்திருக்கிறது தெரியுமா?” என்று கேட்டு அதை விளக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அளவிற்கு ஒரு நடிகராக மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் கமல்ஹாசன் மிகவும் மேம்பட்ட அறிவுடன் இருப்பார்.

உங்கள் குடும்பம் பற்றி?

என்னுடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது எனது குடும்பம் தான். எனக்கு எதைப் பற்றியாவது சில தகவல்கள் தேவைப்பட்டால் பத்து நிமிடங்களில் அதைப்பற்றி அலசி ஆராய்ந்து அந்த தகவலைக் கொடுத்துவிடுவார்கள். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். மகள் இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான அரசு சாரா இயக்கம் ஒன்றை வைத்து நடத்திக்கொண்டு இருக்கிறார். மகன் ஐடி (IT)-ல் படித்துக் கொண்டு இருக்கிறார்.

அஸ்ட்ரோவின் எதிர்கால நடவடிக்கைகள்?

unnamed (6)

மலேசியாவின் புகழ் உலகம் முழுவதும் போக வேண்டும். எடிசன் விருதுகளில் நமது மலேசியக் கலைஞர்களை பாட வைத்திருக்கிறோம். அதே வேளையில், சிங்கப்பூர், மலேசியா பங்கேற்ற பாட்டுப் போட்டியைத் தான் அதிகமான ரசிகர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். இப்படியாக நமது மலேசியக் கலைஞர்களை உலகம் அளவில் கொண்டு செல்லத் தேவையான முயற்சிகளை செய்து வருகின்றோம்.

இவ்வாறு டாக்டர் ராஜாமணி செல்லமுத்துவுடனான 1 மணி நேர நேர்காணல் விறுவிறுப்பாகவும், பல புதிய தகவல்களுடனும் இனிதே நடைபெற்றது.