கோலாலம்பூர், டிசம்பர் 9 – பெரு நாட்டில் இருந்து தான் கோலாலம்பூர் திரும்பியவுடன், கட்சித் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து, மஇகா தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று அறிவித்துள்ளார்.
பெரு நாட்டிற்கு பணி நிமித்தமாக சென்றுள்ள பழனிவேல், அங்கிருந்த படி ‘தி மலேசியன் டைம்ஸ்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள செய்தியில், “சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பெரு வந்துள்ளேன். அதனால் கட்சி தேர்தல் ஆணையத்தை சந்திக்க இயலவில்லை. எனவே வரும் 12-ம் தேதி நாடு திரும்பியவுடன் தேர்தல் ஆணையத்தை சந்தித்து கலந்தாலோசிக்கவுள்ளேன்” என்று சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களை அடுத்து சங்கங்களில் பதிவிலாகா கடந்த வெள்ளிக்கிழமை மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என அறிவித்தது.
23 மத்திய செயலவை உறுப்பினர்கள், தேசிய உதவித்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு அடுத்த 90 நாட்களுக்குள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
அதேவேளையில், பாயான் பாரு, புக்கிட் கெலுக்கோர், சுபாங், பண்டார் பாரு, கூலிம், தைப்பிங், தம்பூன், சிப்பாங் மற்றும் ஜாசின் ஆகிய 8 தொகுதிகளில், இன்னும் 60 நாட்களுக்குள் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்ஓஎஸ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.