கோலாலம்பூர், ஜூலை 9 – அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹுசைன் நஜாடியின் கொலைக்கும், 1எம்டிபி விவகாரத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரை, நஜாடியின் மகனான பாஸ்கல் நஜாடி கடுமையாகச் சாடியுள்ளார்.
காலிட்டின் இந்த அறிவிப்பு, பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் 1எம்டிபி பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டை மேலும் கிளறும் வகையில் உள்ளதாகவும் பாஸ்கல் நஜாடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “விசாரணை ஒன்றும் செய்யாமல் எப்படி அவரால், உடனடியாக அப்படி ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட முடிந்தது? இது நஜிப் மீதான கவனத்தை மக்களிடம் வலுப்படுத்துகின்றது” என்று ரஷ்யாவில் இருந்தபடி தனது பேஸ்புக்கில் பாஸ்கல் நஜாடி தெரிவித்துள்ளார்.
உடனடியாக இவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கானி பட்டேல் தலையிட வேண்டும் என்றும் பாஸ்கல் வலியுறுத்தியுள்ளார்.