சென்னை,ஜூலை 9- சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தனது பெயரில் நட்பு ஊடகங்களில் போலிக் கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்பிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக் கணினிவழிக் குற்றத்தடுப்புப் பிரிவு இணை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு, மதுக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி சரத்குமார் சிரித்துக் கொண்டு காட்சி தரும் புகைப்படம் அவரது முகநூல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்தே அவர் இப்புகாரைத் தெரிவித்திருக்கிறார்.
புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
“எனது பெயரில், எனது புகைப்படங்களுடன் பல போலியான சமூகவலைதளங்கள் செயல்பாட்டில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. இவற்றின் மூலமாகச் சில விரும்பத்தகாத அல்லது பயன்பாட்டில் இல்லாத எனது புகைப்படங்களை வெளியிடுவதை மேற்படி போலியான சமூகவலைதளங்களை இயக்குபவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர், அரசியல்கட்சித் தலைவர், நடிகர் சங்கத் தலைவர், முன்னணி நடிகர்களுள் ஒருவர் எனப் பல்வேறு துறைகளில் சமூக அங்கீகாரத்தோடு, முக்கியமான நபராக நான் இருந்து வரும் நிலையில், இத்தகைய வெளியீடுகள் சிலரது திட்டமிட்ட சதியாகவே எண்ணத் தோன்றுகிறது.
மேலும் இச்செயல்கள் முற்றிலும், எனது புகழுக்கும், கெளரவத்திற்கும், களங்கம் விளைவிக்கும் செயல்கள் என்பதையும், கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இதன் அடிப்படையில் என் பெயரில், எனது புகைப்படங்களை வெளியிட்டு இயங்கி வரும் போலியான சமூக வலைதளங்களை உடனடியாக முடக்கவும், அத்தகைய சமூகவலைதளங்களை இயக்கி வருபவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவைப் பெற்றுக் கொண்ட கணினிவழிக் குற்றப்பிரிவின் காவல்துறைத் துணை ஆணையர் ஜெயக்குமார், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.