Home நாடு என் தந்தையைக் கொல்ல உத்தரவிட்டவர் மலேசியாவில் தான் உள்ளார் – பாஸ்கல்

என் தந்தையைக் கொல்ல உத்தரவிட்டவர் மலேசியாவில் தான் உள்ளார் – பாஸ்கல்

706
0
SHARE
Ad

Paskalகோலாலம்பூர், ஜூலை 11 – தனது தந்தையைக் கொல்ல மூளையாகச் செயல்பட்டவர் தற்போது வேறு பெயரில் மலேசியாவுக்குத் திரும்பியிருப்பதாக கொல்லப்பட்ட அராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹூசைன் நஜாடியின் மகன் பாஸ்கல் நஜாடி தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் இருந்தபடி, மலேசியாகினி இணையத்தளத்திற்கு ‘ஸ்கைப்’ வழியாகப் பேட்டியளித்துள்ள பாஸ்கல், சந்தேகப்படும் அந்த நபரின் பெயர் லிம் யூன் சூ என்றும், அவர் மலேசியாவுக்குத் திரும்பியுள்ள விவரம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தனக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிலுள்ள ஒரு மூத்த அரசியல் தலைவரின் மனைவிக்கும், லிம் என்ற அந்த நபருக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் பாஸ்கல் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

லிம்மின் கடந்த ஐந்து ஆண்டு போன் பதிவுகளை காவல்துறை விசாரணை செய்தால், நிச்சயமாக அந்த  அரசியல் தலைவரின் மனைவியுடனான போன் உரையாடல்களைக் கண்டறிய முடியும் என்றும் பாஸ்கல் நம்புகின்றார்.

லிம் ஒரு தொழிலதிபர் என்றும், அவருக்குச் சொந்தமாக பல கேளிக்கை மையங்களும், வாகன நிறுத்தும் தொழிலும் உள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

மேலும், ஆக்டிவ் போர்ஸ் செக்யூரிட்டி சர்வீசஸ் செண்ட்ரியான் பெர்காட் என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான லிம், அதன் மூலம் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகின்றார்.

மலேசிய நிறுவனங்களுக்கான ஆணையம் (Companies Commission of Malaysia) தகவலின் படி, லிம் அந்த நிறுவனத்தில் 30 சதவிகித பங்குதாரராக உள்ளார். அந்தத் தகவல் கடந்த 5 ஜனவரி, 2015-ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தில் மேலும் இரு பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களில் முன்னாள் மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் முகமட் காசினி முகமட் நூர் 30 சதவிகிதப் பங்குகளும், இஸ்மாயில் முகமட் நோ என்பவர் 40 சதவிகிதப் பங்குகளையும் கொண்டிருக்கின்றனர் என்றும் மலேசிய நிறுவனங்களுக்கான ஆணையம் தகவல் அளித்துள்ளது.

najadiஅராப் மலேசியா வங்கி நிறுவனர் ஹூசைன் நஜாடியைக் கொல்ல கோங் ஸ்வீ  க்வான் என்ற நபருக்கு லிம் 20,000 ரிங்கிட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 2013-ல் கோங் மலேசியக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, அவருக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த கொலையில் மூளையாகச் செயல்பட்டவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை விரைவில் பிடிக்க அனைத்துலக குற்ற ஒழிப்புத்துறையின் உதவியை நாடுவோம் என்றும் மலேசியக் காவல்துறை கடந்த அக்டோபர் 2013-ல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ஹூசைன் நஜாடியைக் கொன்றவரைக் காவல்துறைக் கண்டறிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதனால் இந்தக் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்று கடந்த புதன்கிழமை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் அறிவித்துள்ளது பாஸ்கல் நஜாடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காவல்துறையின் வேலையை நான் செய்ய முடியாது. அது நிச்சயமாக அவர்களால் தான் செய்ய முடியும். அவர்களுக்கு எல்லாம் தெரியும்.. தெரிந்திருக்க வேண்டும்” என்று அடித்துக் கூறும் பாஸ்கல், தற்போது சொந்தமாக ஒரு தனியார் விசாரணை அமைப்பின் மூலம் தனது தந்தையின் மரணம் குறித்து மர்மங்களைக் கண்டறிந்து வருகின்றார்.