கோலகங்சார், ஜூலை 13 – கோலாலம்பூர், பாடாங் பெசார் இடையேயான மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது. பண்டிகை காலத்தில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தற்போது நாளொன்றுக்கு இருமுறை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் சேவையின் எண்ணிக்கை பின்னர் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறியுள்ளார்.
4 மணி 45 நிமிடங்களில் கோலாலம்பூரில் தொடங்கி ஈப்போ வழியாக பாடாங் பெசார் செல்லும் இந்த ரயிலில் செல்ல 81 வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
“இதற்காக 10 மின்சார ரயில்களை வாங்க இருக்கிறோம். அவை அனைத்தும் தயாரான பிறகு ரயில் சேவை அதிகரிக்கப்படும். தற்போது ஹரிராயா சமயம் என்பதால் பொதுமக்களின் வசதிக்காக வடக்குப் பாதையில் தினமும் இருமுறை இந்த ரயில் இயக்கப்படுகிறது,” என்று லியோவ் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளது போன்று, பேராக் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கம்யூட்டர் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோலகங்சார் – சுங்கை சிப்புட் – ஈப்போ – கம்பார் வழித்தடங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறினார்.