புதுடில்லி, ஜூலை 15- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று தில்லியில் மாநில முதலமைச்சர்கள் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வந்து புதிய மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறது.
ஆனால் இந்த மசோதாவில் விவசாயிகளுக்குப் பாதகமான அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறி, மசோதாவை நிறைவேற்றுவதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனால் மத்திய அரசு, மசோதாவில் சில திருத்தங்களை செய்து, நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்தக் குழு கூடுதல் அறிக்கை அளிக்கக் கால அவகாசம் வேண்டியுள்ள நிலையில், இது தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மாநில முதலமைச்சர்கள் ‘நிதி ஆயோக்’ அமைப்பின் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், பிரதமர் தலைமையிலான இந்த நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகப் பெரும்பாலான மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் 9 மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோரும் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், இன்று தலைமைச் செயலகத்திற்கு ஜெயலலிதா வர உள்ளதால் ஓ.பி.எஸ் தனது டில்லிப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.