Home கலை உலகம் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உடல் இன்று தகனம்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உடல் இன்று தகனம்

588
0
SHARE
Ad

msv_3சென்னை, ஜூலை 15- மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் உடல் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது.

உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 87.

சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில், எம்.எஸ்.வி.யின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகத்தினர் மட்டுமின்றி, அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இறுதிச் சடங்குகள் இன்று காலை நடைபெறும் என எம்.எஸ்.விஸ்வநாதனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மறைந்த மெல்லிசை மன்னருக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பிரமுகர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத்  தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசைய்யா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் இசை உலகில் குருவாகவும், வழிகாட்டியாகவும் இருந்து பல்வேறு இசை வல்லுநர்களை உருவாக்கியவர் “என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “எம்.எஸ்.வி மறைந்தாலும், அவர் இசையமைத்த தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கும் வரை அவரது புகழ் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், “எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த, தமிழ்த் திரையுலகின் அபூர்வமனிதர் எம்.எஸ்.விஸ்வநாதன்” என உருக்கமாகக் கூறியுள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்து,” 50 ஆண்டுகளாக இசைத்துக் கொண்டிருந்த ஆர்மோனியம் அடங்கிவிட்டது” எனத் தன் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.எஸ். விஸ்வநாதன், தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் இசை அமைப்பாளர். அவரது இழப்பு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.

” எம்.எஸ்.வி அவர்கள் மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அவரின் இசையால் என்றுமே வாழ்வார்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

“எளிய குடும்பத்திலிருந்து வந்த எம். எஸ் விஸ்வநாதன், தன் சுய பேராற்றலால் தமிழ் இசை உலகில் தனக்கென இடம் பிடித்தவர்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

 

.